ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் போலீசாருக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு


ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் போலீசாருக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
x

ஈசுவரப்பா மீது குற்றச்சாட்டு கூறி ஒப்பந்ததாரர் தற்கொலை செய்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் வருகிற 31-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

ஈசுவரப்பா மீது குற்றச்சாட்டு கூறி ஒப்பந்ததாரர் தற்கொலை செய்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் வருகிற 31-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒப்பந்ததாரர் தற்கொலை

கர்நாடகத்தில் பஞ்சாயத்துராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தவர் ஈசுவரப்பா. இவர், வளர்ச்சி பணிகளை மேற்கொண்டதற்காக லஞ்சம் கேட்பதாக கூறி அரசு ஒப்பந்ததாரரான சந்தோஷ் குற்றச்சாட்டு கூறி இருந்தார். மேலும் கடந்த ஆண்டு (2022) தட்சிண கன்னடா மாவட்டத்தில் தங்கும் விடுதியில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் தற்கொலை செய்தார். தனது சாவுக்கு மந்திரியாக இருந்த ஈசுவரப்பா காரணம் என்று அவர் கூறி இருந்தார்.

இதையடுத்து, மந்திரி பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், ஒப்பந்ததாரர் சந்தோஷ் தற்கொலையில் ஈசுவரப்பா குற்றமற்றவர் என கோர்ட்டில் 'பி' அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதனால் தனக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ஈசுவரப்பா வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையில், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் சந்தோசின் சகோதரர் பிரசாந்த் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆவணங்களை தாக்கல் செய்ய...

அதில், தனது சகோதரர் தற்கொலையில் கோர்ட்டில் 'பி' அறிக்கை தாக்கல் செய்யும் போது போலீசார் சாட்சி, ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை, அதனை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது சந்தோஷ் தற்கொலை வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வருகிற 31-ந் தேதி கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்ய வேணடும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது சந்தோசின் 2 செல்போனில் உள்ள தகவல்கள், தற்கொலை செய்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், போலீஸ் விசாரணை சம்பந்தப்பட்ட வீடியோக்கள், தடயவியல் நிபுணர்கள் வழங்கிய அறிக்கை, தகவல் தொழில் நுட்பம் சமபந்தப்பட்ட டிஸ்க்குகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோர்ட்டு உத்தரவால் ஈசுவரப்பாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story