நவாப் மாலிக்கின் நீதிமன்ற காவல் 2-ந்தேதி வரை நீட்டிப்பு
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நவாப் மாலிக்கின் நீதிமன்ற காவல் வருகிற 2-ந்தேதி வரை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக இருந்தவர் நவாப் மாலிக். இவர் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக கருதப்படும் இவர் பல ஆண்டுக்கு முன்பு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
அப்போது தாவூத் கூட்டாளிகளிடம் இருந்து பல ஏக்கர் நிலத்தை மந்திரி நவாப் மாலிக் பெற்று கோடிக்கணக்கில் பணமோசடி நடத்தியதாக தெரியவந்தது. இது ெதாடர்பாக நவாப் மாலிக் மீது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் குற்றமுகாந்திரம் இருந்ததால் அவரை கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் கேட்டு கோர்ட்டில் முறையிட்டார். கடந்த மே மாதம் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. இருப்பினும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. நேற்று சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய வக்கீல் அவரது உடல் நிலை குறித்து கண்காணிக்க மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் என விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 2-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.