காட்டுயானை தாக்கி தம்பதி சாவு
பங்காபேட்டையில் காட்டுயானைகள் தாக்கியதில் தம்பதி உயிரிழப்பு. மேலும் ரூ.15 லட்சம் மதிப்பிலான விளை பயிர்களையும் நாசப்படுத்திவிட்டு சென்றுள்ளன.
கோலார் தங்கவயல்:
காட்டு யானை அட்டகாசம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்த எல்லையில் வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன.
இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த காட்டுயானைகள் மீண்டும் விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
கணவன்-மனைவி மீது தாக்குதல்
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த காட்டுயானைகள் பங்காருபேட்டை பகுதிக்குள் புகுந்து அங்கு சாலையில் நடந்து சென்ற, கணவன், மனைவியை மிதித்து கொன்றது. மேலும் அதே பகுதியில் உள்ள விளை நிலத்திற்குள் புகுந்து, பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன.
இதை பார்த்த பங்காருபேட்டை மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விளை பயிர்கள் நாசம்
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்தவர்கள் பங்காருபேட்டையை அடுத்த மல்லேனூரு கிராமத்தை சேர்ந்த உஷா (வயது 36) மற்றும் அவரது கணவர் கணேஷ் என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் தனது குழந்தைகளுடன் உஷாவின் தாயாரை பார்ப்பதற்காக பங்காருபேட்டைக்கு வந்திருந்தனர். அப்போது இவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் வந்தது. இதை தம்பதி எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில் இந்த காட்டுயானைகள், குழந்தைகள் தாக்க முயன்றது. அப்போது உஷா குழந்தைகளை காப்பாற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தார். ஆனால் அவரால் தப்பி செல்ல முடியவில்லை. உஷாவை துரத்தி சென்ற யானை ஒன்று, உஷாவை காலால் மிதித்து தாக்கி கொன்றது. இதை பார்த்த கணவர் கணேஷ் வந்தார். அப்போது அவரையும் காட்டுயானை மிதித்து கொன்றதாக தெரியவந்தது.
போராட்டம்
இதேபோல பங்காருபேட்டை தாலுகா காமசமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட சேஷஹள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் காட்டுயானைகள் கூட்டம் புகுந்தது. இதையடுத்து அந்த யானைகள் அங்கு விளைவித்திருந்த முட்டைகோசு, தக்காளி, கேழ்வரகு, சோளம், கம்பு, துவரை ஆகிய விளை பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன. நேற்று காலை விவசாயிகள் சென்று பார்த்தபோது, இது தெரியவந்தது. சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடர் சம்பவத்தால் கோபம் அடைந்த பங்காருபேட்டை தாலுகா மக்கள், வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.