பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் சிக்கிவிடும் - பினராயி விஜயன்


பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் சிக்கிவிடும் - பினராயி விஜயன்
x

பா.ஜனதா 3-வது தடவையாக ஆட்சிக்கு வந்தால், நாடு ஆபத்தில் சிக்கி விடும் என்று பினராயி விஜயன் கூறினார்.

நாட்டின் எதிரிகள்

கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவருமான பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள், நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சிக்கின்றன. மத அடிப்படையிலான நாட்டை உருவாக்க பார்க்கின்றன. பசுக்களை வைத்தும், எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதை வைத்தும் மத மோதல்கள் நடக்கின்றன. ஒரு பிரிவினரை நாட்டின் எதிரிகளாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது.

ஆபத்து

ஒருவர் எந்த சாதி, மதம், இனமாக இருந்தபோதிலும், அவருக்கு சமமான சட்ட பாதுகாப்பு உண்டு. ஆனால் இந்த நிலைமை மாறிவருகிறது. சிறுபான்மை மக்களிடையே அச்சமான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. மத்தியில், பா.ஜனதா 3-வது தடவையாக ஆட்சிக்கு வந்தால், கடக்க முடியாத அளவுக்கு நாடு ஆபத்தில் சிக்கி விடும். அதன்பிறகு வருத்தப்பட்டு பலன் இல்லை. அந்த ஆபத்தை தவிர்ப்பதற்காகத்தான், மதச்சார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகள், பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளன.

இன்னும் வலிமை தேவை

பா.ஜனதாவும், தாங்கள் 3-வது தடவையாக ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்துள்ளது. சமீபகாலத்தில் அக்கட்சி எடுக்கும் ஆபத்தான நடவடிக்கைகள், இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

எதிர்க்கட்சிகள் ஆளும் 4 மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தின. பா.ஜனதா எப்படி செயல்படும் என்பதற்கு இது உதாரணம். இன்னும் இதுபோன்ற சோதனைகளை எதிர்பார்க்கலாம். இதற்காக மக்களின் மனநிலை மாறிவிடாது.

பா.ஜனதாவை தோற்கடிப்பதற்கான அணி வலிமையாக உள்ளது. அதை இன்னும் வலிமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story