காங்கிரசை வெளியேற்ற கவுண்ட்டவுன் ஸ்டார்ட்.. சத்தீஷ்காரில் பிரதமர் மோடி பிரசாரம்
மாநிலத்தில் இருந்து காங்கிரசுக்கு விடைகொடுக்க மக்கள் அதிக ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
முங்கேலி:
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சத்தீஷ்கார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 70 தொகுதிகளிலும் வரும் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், முங்கேலியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
சத்தீஷ்காரில் காங்கிரசின் கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக உங்களிடம் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைவர்களுக்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது. மாநிலத்தில் இருந்து காங்கிரசுக்கு விடைகொடுக்க மக்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். காங்கிரசை பொதுமக்கள் விரும்பவில்லை.
முதல்-மந்திரி ஊழல் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளார். அவர் தனது தொகுதியில் தோல்வியை சந்திப்பார் என ஊடகத்தினர் கூறியிருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.
மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் 508 கோடி ரூபாய் மதிப்பில் மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கில் புலனாய்வு அமைப்புகள் ஏராளமான பணத்தை மீட்டுள்ளன. சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி எவ்வளவு பணம் பெற்றார் என்பதை காங்கிரஸ் வெளியிட வேண்டும். கட்சியின் மற்ற தலைவர்கள் எவ்வளவு பணம் பெற்றுள்ளனர், தலைமைக்கு எவ்வளவு பணம் சென்றுள்ளது என்பதையும் கூறவேண்டும்.
சத்தீஷ்காரில் முதற்கட்ட வாக்குப்பதிவை பார்க்கும்போது, சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என்பது தெளிவாக தெரிகிறது. முதற்கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.