அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரவில்லை என்றால், இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் - சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் தாம் அரசியலிலிருந்தே விலகுவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த ஒரு பேரணியில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-
நான் சட்டமன்றத்திற்கு திரும்ப செல்ல வேண்டும் என்றால், நான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், ஆந்திராவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், அடுத்த தேர்தலில் எங்கள் வெற்றியை நீங்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையெனில் அதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும்.
நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் மீண்டும் கொண்டு வருவேன். இது ஒவ்வொரு வீட்டிலும் விவாதப் பொருளாக மாற வேண்டும். எனது போராட்டம் குழந்தைகளின் எதிர்காலம், மாநிலத்தின் எதிர்காலம் பற்றியது. சிலர் என் வயதைக் கேலி செய்கிறார்கள். நானும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே வயதுடையவர்கள். ஜோ பைடன் 79 வயதில் அமெரிக்க அதிபரானார். ஜெகன்மோகன் ரெட்டி கண்மூடித்தனமாக கடன் வாங்கி, மாநிலத்தை கடன் வலையில் தள்ளுகிறார். அவர் மாநிலத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து கடன்களை வாங்குகிறார் என்றார்.