ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை அளிக்க என்ஜினீயர்களுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் உத்தரவு
பெங்களூருவில் ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து வருகிற 16-ந்தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று என்ஜினீயர்களுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து வருகிற 16-ந்தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று என்ஜினீயர்களுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தலைமை கமிஷனர் ஆலோசனை
பெங்களூருவில் ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடுவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள், என்ஜினீயர்களுடன் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பாரபட்சம் இன்றி அறிக்கை
பெங்களூருவில் ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக ஐகோர்ட்டும் இதுதொடர்பான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அரசும் 2 விதமான அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க மாநகராட்சி என்ஜினீயர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜகால்வாய் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எவ்வளவு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க என்ஜினீயர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. என்ஜினீயர்கள் அளிக்கும் அறிக்கை பாரபட்சம் இன்றியும், யாருக்கும் சாதகமாகவும் இருக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வருகிற 16-ந் தேதி வரை கெடு
என்ஜினீயர்கள் அளிக்கும் அறிக்கையில் எந்த அதிகாரியின் பணி காலத்தில் அலட்சியம் நடந்துள்ளது, எந்த அதிகாரிகளின் பணி காலத்தில் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது, எவ்வளவு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தனித்தனியாக அறிக்கை அளிக்க என்ஜினீயர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக வருகிற 16-ந் தேதி வரை என்ஜினீயர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் அறிக்கை அளிக்காத என்ஜினீயர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி முன்வந்துள்ளது.
இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.