சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்
சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடு இன்று (ஜனவரி 1) முதல் அமலுக்கு வருகிறது.
பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்ற 6 நாடுகளின் பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. அதில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் ஏர் சுவிதா வலைதளத்தில் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை பதிவேற்றும் நடைமுறையை மத்திய அரசு இன்று (ஜனவரி 1) முதல் கட்டாயமாக்கியுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற உறுதிமொழி படிவத்தையும் பயணிகள் வழங்க வேண்டும். அவற்றை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பயண அனுமதிச் சீட்டு வழங்கும் போது உரிய சான்றிதழைப் பயணிகள் பதிவேற்றியுள்ளார்களா என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையானது அனைத்து வர்த்தக விமான நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகிகள், மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.