கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?


கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?
x

கொரோனா போய்விட்டதா, இனி பயம் இல்லையா என்பது பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பெங்களூரு:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கியது. இது ஒரு வகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது.

இந்தத் தொற்றால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர்கூட அருகில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு பரிதாபநிலை ஏற்பட்டது. உலகில் உயிர்களை பறித்ததுடன், மனிதர்களை மட்டும் அல்லாது அரசாங்கங்களையும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாகப் புரட்டி போட்டது கொரோனா.

பொதுமக்கள் அச்சம்

தடுப்பூசிகள் மூலம் அதன் பரவலை தடுத்துவிட்டாலும் தற்போது 4-வது அலை, 5-வது அலை வரப்போகிறது என்றெல்லாம் ஆங்காங்கே புரளிகள் புரண்டு வருவதால், பொதுமக்கள் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர்.

பயணங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போதுகூட கண்டிப்பு இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஒரு சிலர் முக கவசங்கள் அணிந்து செல்வதையும் காணமுடிகிறது. உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

வீழ்ந்தாலோ, எழுந்தாலோ

சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி கூறும் போது, 'இன்றைய அளவில் கொரோனா தொற்று ஓரளவு உலகம் முழுவதும் குறைந்து காணப்பட்டாலும், இது கொரோனாவின் முடிவா? என்பதை தீர்மானமாக சொல்வதற்கு இல்லை. இன்றைய தரவுகளின்படி இந்தியாவில் 1,835 பேர் மட்டுமே நோய்வாய்ப்பட்டதாக பதிவாகி இருப்பது என்பது ஒரு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தியாக இருந்தாலும், கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கொரோனா உடன் பயணித்த அனுபவத்தை மறந்துவிட முடியாது. கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டதாக கருத முடியாததற்கு 2 காரணிகள் உள்ளன.

அதாவது கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. வைரஸ் என்பதால் அது தீவிரமாக உருமாறும் தன்மை கொண்டது. உருமாறும் கொரோனா வைரஸ் வீரியம் அடைந்து வெகுவாக பாதிப்பதற்கும், பரவுவதற்கும் சாத்திய கூறுகள் உள்ளன. எனினும் நோயின் தாக்கத்தை உறுதி செய்யும் மற்றொரு காரணியான நோய் எதிர்ப்பு சக்தி (இம்யூனிட்டி) உலக மக்களிடையே இப்போது அதிகம் காணப்படுவதால் நோய்பரவுதல் தாக்கத்தின் தீவிரமும் கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 காரணிகளில் ஏதேனும் ஒன்று வீழ்ந்தாலோ, எழுந்தாலோ கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். எனவே முக கவசம் அணிவது, கைகளைச் சுத்தம் செய்வது போன்றவற்றை விட்டு விடாமல் தொடர்ந்து பாதுகாப்பு கருதி செய்வது நல்லது' என்றார்.

பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ராஜேந்திரன் கூறுகையில், "தற்போது கொரோனா பரவல் இல்லை. கொரோனா பரவியதுபோது, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை தான் அது தாக்கியது. நாம் நமது மரபு உணவை மறக்க கூடாது. அதில் தான் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவிய பாதிப்பை ஏற்படுத்தியதற்கு உணவு பழக்கமும் ஒரு காரணம். நவீன உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. அதனால் அந்த வைரஸ் நம்மை தாக்குகிறது. தற்போது அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். அனைவரது உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கொரோனா பரவக்கூடிய வாய்ப்பு மிக குறைவு. ஆனாலும் பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கூட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்லும்போது முககவசம் அணிவது நல்லது" என்றார்.

தடுப்பூசியால் பாதிப்பு குறைந்தது

மங்களூரு டவுன் பல்மட்டா பகுதியை சேர்ந்த எண்ணெய் வியாபாரியான குணசேகரன் கூறுகையில், "சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா இந்தியா உள்பட உலக நாடுகளை பெருமளவில் பாதிப்பு அடைய செய்தது. இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். மத்திய அரசு அனைவருக்கும் இலவச தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்தது. இதனால் இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகாலமாக அதன் தாக்கம் இருந்து வருகிறது. எனவே கொரோனா நம்மை விட்டு போய்விட்டது என கூற முடியாது. ஆகவே கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சானிடைசர் கொண்டு கை கழுவுவது, முககவசம் அணிவதை தொடர வேண்டும் என்றார்.

சிக்கமகளூரு மாவட்ட சுகாதாரத்துறை கண்காணிப்பு குழுவை சேர்ந்த டாக்டர் மஞ்சுநாத் கூறியதாவது:-

கொரோனா என்பது ஒரு தொற்றுநோய். அது எப்போதுவேண்டும் என்றாலும் பரவும். கர்நாடகத்தில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை. பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்றை தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இதுவரை 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. எளிதில் குணப்படுத்திவிட முடியும். அதையும் மீறி கொரோனா தொற்று ஏற்பட்டால், அதற்கான மருந்துகள் உள்ளது. மேலும் நவீன சிகிச்சை உள்ளது. அதை கொண்டு குணப்படுத்திவிட முடியும். உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் நாம் அலட்சியமாக இருக்க கூடாது. முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். முக கசவம், சானிடைசர் பயன்படுத்துவதை நிறுத்த கூடாது. தொடர்ந்து அதை பயன்படுத்துவது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

பயப்பட தேவையில்லை

மைசூரு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பொன்னப்பா கூறுகையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் எங்கும் மக்களை பயமுறுத்திய கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகத்திலும் தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது. அவ்வப்போது கொரோனா பாதித்த ஒன்று அல்லது 2 நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். கர்நாடகத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அதிகமானோர் இருமல், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக யாரும் பயப்பட வேண்டாம். டாக்டர்களிடம் சென்று மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்.

இந்தியாவில் இலவச தடுப்பூசி போடப்பட்டதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது. முன்பு கொரோனா நோய்க்கு சிகிச்சை கண்டறியப்படவில்லை. அதனால் அதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இன்று அதற்கென மருத்துவ சிகிச்சை வந்துவிட்டது. மேலும் தடுப்பூசியும் வந்துவிட்டது. இதனால் இனி கொரோனா பரவல் இல்லை எனலாம். மக்கள் கொரோனா பாதிப்பை கண்டு பயப்பட வேண்டியதில்லை" என்றார்.

மைசூரு சித்தார்த்தா லே-அவுட்டை சேர்ந்த மகாதேவா சாமி கூறுகையில், "கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் தமக்கு இருமல், தும்மல் இருந்தால் முக கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், காற்று வீசும் இடங்களுக்கு, தூசி இருக்கும் இடங்களுக்கு போக வேண்டாம். நமது ஆரோக்கியத்தை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதனால் மக்கள் இந்த சமயத்தில் முகக் கவசம் அணிந்து சுற்றவது நல்லது, லேசான காய்ச்சல் வந்த உடனே ஆஸ்பத்திரிகளுக்கு சென்று காண்பித்து சிகிச்சை பெற்றுக் கொண்டால் ஆரம்பத்திலேயே அதை குணப்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளரும், தொழில் அதிபருமான ராம.சுப்பிரமணியன் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது. இந்திய மக்கள் அடிப்படையிலேயே சத்தான உணவுகளை உட்கொண்டு வருபவர்கள். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நாடுகளை சேர்ந்த மக்களைவிட நம் நாட்டினருக்கு அதிகம். தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு கடுமையாக குறைந்துவிட்டது. எனவே முககவசம் அணிய தேவையில்லை. இறைவன் நம்மை படைக்கும் போதே மூச்சு காற்றை சுவாசிக்க மூக்கு, நுரையீரலை படைத்துள்ளான். முககவசத்தை நீண்ட காலமாக அணிவதால் தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது. நமது உடலில் வாயு, நீர், வெப்பம் ஆகியவை இயற்கையாக உள்ளது. இந்த மூன்றும் நமது உடலை காக்க கூடியவை. அதில் ஏதாவது குறைந்தால் தான் நோய் வருகிறது. எனவே முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை" என்றார்.


Next Story