குக்கர் வெடிகுண்டு சம்பவம்: ஐ.எஸ். அமைப்புடன் டார்க்வெப் வழியே தொடர்பு; அதிர்ச்சி பின்னணி வெளியீடு


குக்கர் வெடிகுண்டு சம்பவம்:  ஐ.எஸ். அமைப்புடன் டார்க்வெப் வழியே தொடர்பு; அதிர்ச்சி பின்னணி வெளியீடு
x
தினத்தந்தி 21 Nov 2022 4:53 PM IST (Updated: 21 Nov 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

வீட்டிலேயே வெடிகுண்டுகளை தயாரித்து ஆற்றங்கரை பகுதிகளில் அவற்றை வெடிக்க செய்து, ஷாரீக் சோதனை செய்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.



மங்களூரு,


கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் ஆட்டோ ஒன்றில் மர்ம பொருள் ஒன்று நேற்று முன்தினம் மாலை திடீரென வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஷாரீக் என்ற பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. பின்னர் அது குக்கர் வெடிகுண்டு என தெரிய வந்தது.

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல. பெரிய பாதிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது என கர்நாடக டி.ஜி.பி. கூறினார்.

ஆட்டோவில் இருந்து அடையாள அட்டை ஒன்றையும் பறிமுதல் செய்த போலீசார் உயர்மட்ட விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஆட்டோ பயணி, கர்நாடகாவின் ஹப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒருவருடைய ஆதார் அட்டையை திருடி அதனை பயன்படுத்திய அதிர்ச்சி விவரம் தெரிய வந்து உள்ளது.

ஆட்டோ பயணி, பேட்டரி மற்றும் வெடிகுண்டு ஆகியவை இணைக்கப்பட்ட குக்கர் ஒன்றை எடுத்து சென்றுள்ளார் என கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் உறுதிப்படுத்தி உள்ளார். அது வெடித்ததில், பயணி, ஓட்டுனர் என இருவரும் காயம் அடைந்து உள்ளனர்.

அவர்கள் இருவரும் சிகிச்சையில் உள்ளனர். குற்றவாளியான பயணியால் போலீசாரிடம் பேச முடியவில்லை. அந்த குற்றவாளி போலி ஆதார் அட்டை, போலியான முகவரி, போலியான பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய அந்த நபர் கோவையில் இருந்து போலியான பெயரில் சிம் கார்டு வாங்கியுள்ளார். செல்போன் டவர் சிக்னலின்படி, அந்த நபர் தமிழகத்திற்கு பயணித்து உள்ளார். அதனால், அவர் யாரிடம் எல்லாம் செல்போன் வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்ற விவரங்களை தீர விசாரித்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள அவரது கூட்டாளிகளை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது என்று டி.ஜி.பி. கூறியுள்ளார்.

இந்நிலையில், மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராம பகுதியை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதகையை சேர்ந்த நபரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியது அம்பலமாகியுள்ளது. மேலும் அந்த நபரை கோவை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், மங்களூரு ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் கோவை கும்பலுடன் குற்றவாளி தொடர்புடையவரா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் ஷாரீக் வசித்து வருகிறார் என இன்று தெரிய வந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஹிந்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு கீழ் ஷாரீக் பணியாற்றி, அவர்களின் உத்தரவுகளை செயல்படுத்தி வந்துள்ளார்.

டார்க்வெப் எனப்படும் சிறப்பு மென்பொருள் உதவியுடன் இயங்க கூடிய வலைதள பிரவுசரின் வழியே ஷாரீக் தனக்கு உத்தரவிடுபவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் என கர்நாடக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஹிந்த் அமைப்பிலுள்ள முசாபிர் உசைன் என்பவருடன் தொடர்பில் உள்ளவர் அராபத் அலி. ஷாரீக்கை அவர் கையாண்டு வந்து உள்ளார்.

இதேபோன்று, அப்துல் மதின் தஹா என்பவருக்கும் ஷாரீக் பணிசெய்து வந்துள்ளார். இதுதவிர, 2 முதல் 3 பேரின் உத்தரவிற்கேற்ப ஷாரீக் செயல்பட்டு வந்துள்ளார். அவர்களை அடையாளம் காண வேண்டியுள்ளது என மூத்த காவல் அதிகாரியான ஏ.டி.ஜி.பி. அலோக் குமார் கூறியுள்ளார்.

ஷாரீக் உயிர் பிழைக்க வேண்டும் என்பதே எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விசயம். அவரிடம் கேள்வி கேட்க வேண்டிய நிலைக்கு அவரை கொண்டு வரவேண்டும் என அலோக் குமார் கூறியுள்ளார்.

இதுவரை கர்நாடகா முழுவதும் 5 இடங்களில் சோதனை நடந்துள்ளது. அவற்றில் கர்நாடகாவின் மைசூரு நகரில் ஷாரீக்கின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

வீட்டிலேயே வெடிகுண்டுகளை தயாரித்து ஆற்றங்கரை பகுதிகளில் அவற்றை வெடிக்க செய்து, ஷாரீக் சோதனை செய்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.

கடந்த செப்டம்பர் 19-ந்தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு பின்பு, அவருடன் சென்ற அவரது கூட்டாளிகள் 2 பேரை அடுத்த நாளில் போலீசார் கைது செய்தனர். ஆனால், ஷாரீக் தப்பி விட்டார். அதன்பின் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருடிய ஆதார் அட்டையை வைத்து மைசூருவில் தொடர்ந்து வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஷாரீக் ஈடுபட்டு வந்துள்ளார் என கூறியுள்ளார்.

5 வெவ்வேறு குழுக்களை அமைத்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதற்கு முன்பு, உபா வழக்குகளின் கீழ் ஷாரீக்குக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது.

சிவமொக்கா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி பகுதியில் 4 இடங்களிலும், மங்களூரு நகரில் ஓரிடத்திலும் இன்று காலை தேடுதல் வேட்டை நடந்தது. நேற்று 2 இடங்கள் என மொத்தம் இதுவரை 7 இடங்களில் நாங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளோம். சில மின்னணு கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளோம்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும் சென்ற ஷாரீக், அமேசான் வழியே ஒரு பொருளை வாங்கியதும் தெரிய வந்துள்ளது. சமீபத்திய கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜமீஷா முபீனை அவர் சந்தித்து உள்ளாரா? அல்லது அவருடன் தொடர்பில் இருந்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முபீன் உயிரிழந்த நிலையில், இருவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது தெரிகிறது என்றும் ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு உண்டா? என்பது தெரியவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.


Next Story