பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து: பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தூதரகம் முன் பா.ஜனதா போராட்டம்


பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து: பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு மத்திய அரசு கடும் கண்டனம்  தூதரகம் முன் பா.ஜனதா போராட்டம்
x

பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பேசிய மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை சாடினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடியை 'குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர்' என குறிப்பிட்டார்.

பிலாவல் பூட்டோவின் இந்த சர்ச்சை கருத்து இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து தொடர்பாக அவருக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது அந்த நாட்டின் மற்றுமொரு கீழ்த்தரமான செயல் எனவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், 'லக்வி, ஹபீஸ் சயீத், மசூத் அசார், சஜித் மிர், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, ஒசாமா பின்லேடனை தியாகி என்று போற்றுகிற நாடு பாகிஸ்தான். ஐ.நா.வால் பட்டியலிடப்பட்ட 126 பயங்கரவாதிகளையும், 27 பயங்கரவாத அமைப்புகளையும் கொண்டதாக வேறு எந்த நாடும் பெருமை கொள்ள முடியாது' என சாடினார்.

மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறும்போது, 'பயங்கரவாத செயல்களின் மையமாக உள்ள ஒரு நாட்டின் மந்திரி ஒருவர் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது இது முதல் முறையல்ல. தங்கள் நாட்டிற்குள் நடக்கும் பயங்கரவாத செயல்களில் இருந்து உலகை திசை திருப்பவே அவர் இந்த கருத்துகளை கூறுகிறார்' என்று தெரிவித்தார்.

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட வலியின் விளைவாக அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் என கூறிய அனுராக் தாகூர், பிலாவலின் கருத்துகள் மிகவும் கேவலமானது மற்றும் வெட்கக்கேடானது என்றும் சாடினார்.

வெளியுறவு இணை மந்திரி மீனாட்சி லெகி, 'இறையாண்மை கொண்ட எந்த ஒரு நாட்டின் வெளியுறவு மந்திரியும் இவ்வாறு பேசுவது இல்லை. ஆனால் இது பாகிஸ்தான். அவர்களிடம் இதைத்தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும். பலூசிஸ்தான், காஷ்மீர், பஞ்சாப் மற்றும் கராச்சியில் மக்களை கொன்று குவித்தவர்கள் அவர்கள்' என கூறினார்.

இதைப்போல பா.ஜனதா சார்பிலும் பிலாவல் பூட்டோவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

கட்சியின் வெளிவிவகாரங்கள் துறை தலைவர் விஜய் சவுதைவாலே கூறுகையில், 'பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானின் பப்புவாக இருக்கிறார். அவரது கருத்துகள் கண்டிக்கத்தக்கவை. உலக அரங்கில் அவருக்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை. அவரிடம் இருந்து சிறப்பாக எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை' என தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லி பா.ஜனதா சார்பில் அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி குறித்த சர்ச்சை கருத்துக்காக பிலாவல் பூட்டோ மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story