இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து:நடிகர் சேத்தன் கைது
இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சேத்தனை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சேத்தனை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.
கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சேத்தன். இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி மண்டியாவுக்கு வந்தார். அவர் மண்டியா மாவட்டம் மத்தூரில் வைத்து பெங்களூரு-மைசூரு இடையேயான விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் வருகையையொட்டி அங்கு உரிகவுடா-நஞ்சேகவுடாவின் உருவச்சிலைகளை பா.ஜனதாவினர் அமைத்திருந்தனர். அவர்கள் இருவரும் திப்புசுல்தானை கொன்றவர்கள் என்றும் கூறப்பட்டது.
இது அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் பா.ஜனதாவினருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உரிகவுடா, நஞ்சேகவுடா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் சேத்தன் தனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் இந்துத்துவா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுபற்றி சிவக்குமார் என்பவர் பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் சேத்தனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நடிகர் சேத்தனை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே நடிகர் சேத்தன் சார்பில் ஜாமீன் கோரி பெங்களூரு கோர்ட்டில் அவரது வக்கீல் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு(வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.