உ.பி.யில் தொடரும் அவலம்; நள்ளிரவில் பெண்ணை கடித்து, தாக்கிய ஓநாய்
உத்தர பிரதேசத்தில் ஆபரேசன் பேடியா என்ற பெயரில் ஓநாய்களை பிடிக்கும் பணியில் இதுவரை 5 ஓநாய்கள் பிடிபட்டு உள்ளன.
பஹ்ரைச்,
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மஹசி துணை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2 மாதங்களாக ஓநாய் கூட்டத்தின் தாக்குதல் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. 6 ஓநாய்கள் வரை ஒன்றாக கூடி, திடீரென இரவில், ஊருக்குள் புகுந்து வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளை, வாயில் கவ்வி கொண்டு காட்டு பகுதிக்குள் தப்பி சென்று விடுகிறது.
இதுவரை 9 குழந்தைகள் ஓநாய்களின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளன. பெண் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். இதுவரை மொத்தம் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், ஓநாய்களை கண்டதும் சுட உத்தரபிரதேச அரசும் உத்தரவு பிறப்பித்தது. ஆபரேசன் பேடியா என்ற பெயரில் ஓநாய்களை பிடிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில், 5 ஓநாய்கள் பிடிபட்டு உள்ளன.
இவற்றில் ஒரேயொரு ஓநாய் சிக்காமல் தப்பியுள்ளது. ஓநாய்களின் இருப்பிடங்களை கண்டறிவதற்காக, கேமிராவுடன் கூடிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓநாயை கூண்டு வைத்து பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. ஓநாய் தாக்குதல் சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு சுமன் என்ற 11 வயது சிறுமியை ஓநாய் ஒன்று கடித்து, தாக்கியுள்ளது. 6-வது ஓநாயை அரசு நிர்வாகம் தேடி வரும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தில் கைரிகாட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராய்ப்பூர் கொரியன் திப்ரா கிராமத்தில் நேற்றிரவு 10 மணியளவில் 50 வயதுடைய புஷ்பா தேவி என்ற பெண் வீட்டில் தூங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது, ஓநாய் ஒன்று அந்த பெண்ணின் தொண்டையை பிடித்து இழுத்து சென்றுள்ளது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் பெண்ணின் குரல் கேட்டு, உதவிக்கு ஓடி வந்துள்ளனர். இதனால், ஓநாய் அந்த இடத்தில் இருந்து தப்பியோடி விட்டது. இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அந்த பகுதியில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர். வீட்டில் பெண்ணின் குடும்பத்தினர் யாரோ ஒருவர் கதவை திறந்து வைத்ததும், அந்த ஓநாய் வீட்டுக்குள் சென்று யாரும் பார்க்காத இடத்தில் பதுங்கி இருந்து விட்டு, இரவில் பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என புஷ்பாவின் மருமகன் கூறியுள்ளார்.