காங்கிரசின் அவமதிப்பு கலாசாரத்தை தண்டிக்க வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் அவமதிப்பு கலாசாரத்தை தண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பெங்களூரு:-
அவமதிக்கும் கலாசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி மிக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் முல்கியை தொடர்ந்து உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக வாக்குறுதி அளித்துள்ள நிலையில் அவர் தனது பேச்சின் தொடக்கத்தில் பஜ்ரங்க பலி வாழ்க என்று கூறி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைவர்(சித்தராமையா), இது தனது கடைசி தேர்தல், இத்துடன் ஓய்வு பெறுவதாக கூறி ஓட்டு கேட்கிறார். இன்னொரு வழி என்றால், என்னை அவமரியாதையாக பேசி ஓட்டு கேட்கிறார்கள். காங்கிரசாரின் இந்த அவமதிக்கும் கலாசாரத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?.
இன்னொருவரை அவமதிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?.
அவமதிப்பு கலாசாரம்
ஒரு சிறிய மனிதரை அவமதிப்பதையும் நீங்கள் ஏற்பீர்களா?. இவ்வாறு அவமதிப்பவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?. நீங்கள் வாக்குச்சாவடியில் ஓட்டு பொத்தானை அழுத்தும்போது, ஜெய் பஜ்ரங்கபலி என்று கூறுங்கள். காங்கிரசின் அவமதிப்பு கலாசாரத்திற்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். கர்நாடகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதே எங்களின் ஒரே குறிக்கோள். இதற்காக எங்களிடம் திட்டம் உள்ளது. தவறான ஆட்சி நிர்வாகத்தால் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கை இழந்துவிட்டது.
தவறான குற்றச்சாட்டுகள், தவறான உத்தரவாதங்கள் தான் காங்கிரசுக்கு இருக்கும் ஆதரவு. காங்கிரஸ் கட்சி நாட்டை பல பத்தாண்டுகள் ஆட்சி செய்தது. அப்போது நாட்டின் வளர்ச்சியை விட தங்களின் சொந்த வளர்ச்சியில் தான் அக்கட்சி தலைவர்கள் கவனம் செலுத்தினர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயனாளர்கள் பட்டியலில் போலி பயனாளர்களின் பெயர்களை சேர்த்து முறைகேடு செய்தனர். அந்த போலி பெயர்களில் அரசின் நிதியை செலவு செய்தனர்.
கருப்பு கஜானா
அந்த பணம் காங்கிரஸ் தலைவர்களின் கருப்பு கஜானாவுக்கு சென்றது. நாடு முழுவதும் அரசு திட்ட பயனாளர்கள் பட்டியலில் 10 கோடி பெயர்களை போலியாக காங்கிரசார் சேர்த்திருந்தனர். பிறக்காதவர்களின் பெயர்கள், இந்த பூமியில் இல்லாதவர்களின் பெயர்களை சேர்த்தனர். அந்த பெயர்களில் அனுப்பிய பணம் எங்கே போனது?. அந்த காங்கிரசின் ஊழல் தலைவர்களின் பாக்கெட்டுக்கு சென்றது.
கடந்த 9 ஆண்டுகளில் இந்த போலி பயனாளர்களின் பெயர்களை நீக்கியுள்ளோம். ஏழைகள் தங்களின் உரிமைகளை பெறுவதை உறுதி செய்துள்ளோம். இந்த நடவடிக்கையால் ரூ.2¾ லட்சம் கோடி நிதி தவறானவர்களின் கைகளுக்கு செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளோம்.
இவ்வாறு மோடி பேசினார்.