பாகிஸ்தானிய உளவாளிகளுடன் தொடர்பு, அசாமில் 10 பேர் கைது; 200 சிம் கார்டுகள் பறிமுதல்
பாகிஸ்தானிய உளவாளிகளுடன் தொடர்பு என்று சந்தேகிக்கப்படும் 10 பேரை போலீசார் கைது செய்து, 200 சிம் கார்டுகளை பறிமுதல் செய்து உள்ளனர்.
நகாவன்,
அசாம் மாநிலத்தில் சில இடங்களில் வன்முறை பரவியது. இதனை தொடர்ந்து திங் மற்றும் பததிராவா பகுதிகளில் நகாவன் நகர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, சந்தேகத்திற்கு உரிய வகையிலான 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அளித்த தகவலின் பேரில் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.
அவர்கள், பாகிஸ்தானை சேர்ந்த உளவாளிகளுக்கு சிம் கார்டுகளை வினியோகித்து உள்ளனர் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 200 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
அவர்களில் பலர் இந்திய விசாரணை முகமைகளிடம் இருந்து தப்பிக்க, ஓ.டி.பி. எண்களை பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு அனுப்பி, அவர்களது எண்களை வாட்ஸ்அப்புடன் இணைக்க கோரியுள்ளனர்.
இதுபோன்று பலர் ஈடுபட்ட உளவு தகவல் கிடைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நகாவன் காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்று உள்ளனர். வேறு விவரங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.