'இந்திய ஒற்றுமை யாத்திரை' ஏற்பாடுகளை மேற்பார்வையிட திக்விஜய சிங் ஜம்முவில் ஆய்வு
பாரத் ஜோடோ யாத்திரையின் 98-வது நாளான இன்று ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது.
இந்த யாத்திரையின்போது ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். ராகுல்காந்தியின் இந்த யாத்திரை பயணத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, பாரத் ஜோடோ யாத்திரையின் 98-வது நாளான இன்று ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவருடன் இணைந்து ஆயிரக்கணக்கானோர் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீரில் கட்சியின் 'பாரத் ஜோடோ யாத்ரா' அணிவகுப்புக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட, மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய சிங் இரண்டு நாள் பயணமாக ஜம்மு சென்றடைந்தார்.
கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஜம்மு பிரதேசத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
யாத்திரைக்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் திக் விஜய்சிங்கை, ஜம்மு விமான நிலையத்தில் முன்னாள் யோகேஷ் சாவ்னி தலைமையிலான மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர் என்று பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் சர்மா தெரிவித்தார்.