'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களுக்கு மேல் ஜெயிக்க முடியாது' - ஹிமாந்தா பிஸ்வா சர்மா


மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களுக்கு மேல் ஜெயிக்க முடியாது - ஹிமாந்தா பிஸ்வா சர்மா
x

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஒரு பிராந்திய கட்சியாக மாறிவிட்டது என ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களுக்கு மேல் ஜெயிக்க முடியாது என அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 40 இடங்களுக்கு மேல் கிடைக்காது. அவர்கள் ஏற்கனவே ஒரு பிராந்திய கட்சியாக மாறிவிட்டனர். தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் சரிவைக் காண்பீர்கள். குடும்ப அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இந்த தேர்தலுக்குப் பிறகு நாட்டில் எந்த குடும்ப அரசியலும் நிலைக்காது.

அசாமில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். நாளை மறுநாள் அவர் மீண்டும் வருகை தருவார். தொடர்ந்து மார்ச் 23-ந் தேதி 30,000 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் என்ன மாதிரியான வளர்ச்சி நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.

பிரதமர் ஜி-20 மாநாட்டை டெல்லியில் நடத்தினார். அவர் அதை குஜராத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் டெல்லியில் நடத்தியதால் கெஜ்ரிவாலுக்கு தேசிய தலைநகரை மேம்படுத்த அது உதவவில்லையா?

அசாம் மாநிலத்தில் இஸ்லாமியர்களிடம் இருந்து பிரதமர் மோடிக்கு கிடைக்கும் அன்பை யார் வேண்டுமானாலும் நேரில் வந்து பார்க்கலாம். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே நெருக்கடியான சூழல் நிலவுகிறது. ஆனால் மெய்தியோ அல்லது குக்கி சமூகத்தினரோ பா.ஜ.க.வை விமர்சிக்கவில்லை.

இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதை மெய்தி சமூகத்தினர் வரவேற்றனர். ஆனால் நாகாக்கள், குக்கிகள் மற்றும் மிசோக்கள் அதை எதிர்க்கின்றனர். வட-கிழக்கில் ஆரம்ப காலத்தில் இருந்தே பல முரண்பாடுகள் உள்ளன. அவை பா.ஜ.க.வால் உருவாக்கப்பட்டவை அல்ல. இதற்காக பிரதமர் மோடியை யாரும் விமர்சிக்கவில்லை. குக்கியோ, மெய்தியோ பிரதமரை விமர்சிப்பதை நீங்கள் பார்த்தீர்களா?"

இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசினார்.


Next Story