நாடாளுமன்ற தேர்தல்: டெல்லியில் 7 தொகுதிகளிலும் முழு பலத்துடன் தயாராகும்படி கட்சியினருக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஆயத்தப் பணிகளைத் தொடங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஆயத்தப் பணிகளைத் தொடங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்படி நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். 7 தொகுதிகளிலும் ஆயத்தப் பணிகளைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7 மாதங்கள் உள்ளன. தேர்தலுக்கு தயாராகும்படி கட்சித் தொண்டர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். 7 தொகுதிகளிலும் முழு பலத்துடன் தயாராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு மக்கள் காங்கிரசை பார்க்கும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காண்கிறோம்.
4 மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 40 தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தனர். டெல்லியில் காங்கிரசை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் முடிவு குறித்து எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள டெல்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி மந்திரியுமான சவுரப் பரத்வாஜ் கூறும்போது, "எங்கள் மத்திய தலைமை இதுகுறித்து முடிவு செய்யும். எங்கள் அரசியல் விவகாரக் குழுவும் 'இந்தியா' கூட்டணி கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கும்" என்று கூறினார்.