எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளும் என்று அதன் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிற தேர்தலுக்காக இப்போதே அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகத்தொடங்கி விட்டன. ஆளும் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியைப்பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறது. இது தொடர்பான வியூகங்களை அந்தக் கட்சி வகுத்து வருகிறது.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்து ஒரே அணியில் கொண்டு வந்து, பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே வேட்பாளரை நிறுத்தி, பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான முயற்சியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் களம் இறங்கி இருக்கிறார்.
அவர் காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி என எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார்.
12-ந் தேதி கூட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும், எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் பாட்னாவில் நடத்தப்படும் என நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார்.
அதன்படி வரும் 12-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை அவர் பாட்னாவில் கூட்டி உள்ளார். அது அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் இதில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது.
காங்கிரஸ் பங்கேற்கும்
இப்போது அதற்கு பதில் கிடைத்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாட்னாவில் 12-ந் தேதி நடக்கிற எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக கலந்து கொள்கிறது. ஆனால் காங்கிரஸ் சார்பில் யார் கலந்து கொள்வது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. யார் அதில் கலந்துகொள்வது என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நாடு திரும்பி விட்டால் அவரே பங்கேற்கலாம் அல்லது கட்சித்தலைவர் கார்கே கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது