முன்னாள் பிரதமர் நேருவின் கைப்பட எழுதப்பட்ட 'முதல் சுதந்திர தின உரையை' சமூக வலைதளத்தில் பகிர்ந்த காங்கிரஸ்!
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற ‘முதல் சுதந்திர தின உரையின்’ வரைவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற 'முதல் சுதந்திர தின உரையின்' வரைவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
அதில் அவர் நாட்டின் "விதியுடன் கூடிய தேதி" பற்றி எழுதியிருந்தார் என தெரிவித்துள்ளது.1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு, அரசியல் நிர்ணய சபையின் நள்ளிரவு அமர்வில் நேரு ஆற்றிய உரையின் வீடியோவையும் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.
"75 ஆண்டுகளுக்கு முன்பு, நள்ளிரவுக்குப் பிறகு, நேரு தனது அழியாத 'டிரிஸ்ட் வித் டெஸ்டினி' உரையை நிகழ்த்தினார். 14.8.47 தேதியிட்ட அவரது கைப்பட எழுதப்பட்ட வரைவு இதோ பகிரப்பட்டுள்ளது.
அவர் 'நாட்டின் விதியுடன் கூடிய தேதி' என்று தன் கை பட எழுதியிருந்தார். ஆனால் அதை 'விதியுடன் முயற்சி' என்று அவர் வழங்கினார்" என ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேரு எழுதியிருப்பதாவது:- "நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் சந்தித்துக் கொண்டோம், நம்முடைய வாக்குறுதியை முழுமையாகவோ, முழுவீச்சிலோ அல்லாமல் மிகவும் கணிசமான அளவில் மீட்டெடுத்தாகவேண்டிய தருணம் வந்திருக்கிறது.
நள்ளிரவு 12 மணி அளவில், உலகம் உறங்கிகொண்டிருக்கிற வேளையில் இந்தியா விழித்தெழுந்து உயிர்ப்பையும் விடுதலையையும் பெறுகிறது.
ஒரு காலகட்டம் நிறைவடைந்து பழையதிலிருந்து புதுமைக்கு மாறும் நிலையில், நீண்ட நெடிய காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா பேசத் தொடங்கும் போதுதான் வரலாற்றில் அரிதான ஒரு தருணம் வருகிறது.
இந்திய தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் இன்னும் விரிவான நிலையில் மனிதகுலம் அனைத்திற்குமான சேவைபுரிவதற்கு இத்தகைய புனிதமான ஒரு தருணத்தில் நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்ளும் உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது ஆகும்…" என்று நேரு ஆகஸ்ட் 14, 1947 அன்றிரவு கூறியதை எழுதினார்.
முன்னதாக நேருவை குற்றம்சுமத்தி பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாட்டின் 2-வது பிரிவினை பயங்கரங்கள் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சியை இலக்காக கொண்டு 7 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது.
அதில், பாகிஸ்தான் உருவாவதற்கான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளுக்கு முன்னாள் பிரதமர் நேரு தலைவணங்கி விட்டார் என குற்றம்சாட்டும் வகையில், காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
இதனை காங்கிரசார் கண்டித்த நிலையில், தொடர்ந்து நேரு புறக்கணிக்கப்படுவதை பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.