சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்


சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டதை கண்டித்து  கர்நாடகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்
x

சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு: சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

முட்டை வீச்சு

முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீர சாவர்க்கர் புகைப்படம் வைத்தது தவறு என்று சித்தராமையா கூறி இருந்தார். இதற்கு பா.ஜனதா, இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குடகில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற சித்தராமையாவின் கார் மீது பா.ஜனதாவினர் முட்டை வீசி தாக்கி இருந்தனர். இதுதொடா்பாக போலீசார் 9 பேரை கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டதை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூரு சுதந்திர பூங்காவில் முன்னாள் மந்திரி எச்.எம்.ரேவண்ணா தலைமையில் நடந்த போராட்டத்தில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதவி விலக கோரியும் கோஷங்கள் எழுப்பபட்டது.

உருவபொம்மை எரிப்பு

இதுபோல கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட் தலைமையிலும் போராட்டம் நடந்தது. அப்போது முகமது நலபட் உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதுபோல சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூருவிலும் போராட்டம் தீவிரமாக நடந்தது. நகரில் உள்ள முக்கிய சர்க்கிளில் காங்கிரசார் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.

அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புகைப்படம் கிழிக்கப்பட்டது. குடகில் மடிகேரி, குஷால்நகரிலும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். தார்வாரில் நடந்த போராட்டத்தின் போது வீரசாவர்க்கர், அரக ஞானேந்திராவின் உருவப்படங்கள், உருவபொம்மை எரிக்கப்பட்டது. சித்ரதுர்காவில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுயைிட்டு போராட்டம் நடத்திய காங்கிரசார் பா.ஜனதா அலுவலகம் மீது முட்டை வீசினர். இதுதவிர சில பகுதிகளில் பா.ஜனதாவினருக்கு முட்டை அனுப்பும் போராட்டமும் நடந்தது. வடகர்நாடகத்திலும் பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி இருந்தனர்.


Next Story