'காங்கிரஸ் கட்சி மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படும்' - ஜே.பி.நட்டா


காங்கிரஸ் கட்சி மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படும் - ஜே.பி.நட்டா
x

ஊழல் செய்து திரட்டப்பட்ட பணத்தை காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பயன்படுத்தலாம் என ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் தெரிவித்தார்.

மேலும் இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை என்று விமர்சித்த அவர், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது முற்றிலும் பொய் என்று குறிப்பிட்டார். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் தேர்தல் விளம்பரங்களை செய்வதற்கு கூட தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவித்த ராகுல் காந்தி, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்து சேர்த்த கருப்புப் பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தலாம் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சி மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படப் போகிறது. தங்களுக்கு ஏற்படப்போக்கும் வரலாற்றுத் தோல்விக்கு பயந்து, காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அமைப்புகள் குறித்து விமர்சித்துள்ளனர்.

அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல்கள் குறித்து விவரித்துள்ளனர். உண்மையில், அவர்களின் திவால்நிலை தார்மீகம் மற்றும் அறிவுசார்ந்ததாகுமே தவிர, நிதி சார்ந்தது அல்ல. காங்கிரஸ் கட்சியினர் தங்கள் சொந்த தவறுகளை சரிசெய்வதற்கு பதிலாக, அவர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளை குற்றம் சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும், வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு துறையிலும் கொள்ளையடித்த ஒரு கட்சி, நிதி பற்றாக்குறை பற்றி பேசுவது வேடிக்கையானது. ஜீப்பில் தொடங்கி ஹெலிகாப்டர் வரை அவர்கள் செய்த அனைத்து ஊழல்களிலிருந்தும் திரட்டப்பட்ட பணத்தை காங்கிரஸ் தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது பொய் என காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். கடந்த 1975 முதல் 1977 வரையிலான சில மாதங்கள் மட்டுமே இந்தியா ஜனநாயக நாடாக இருக்கவில்லை என்பதையும், அந்த நேரத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்திதான் என்பதையும் நான் அவர்களுக்குத் தாழ்மையுடன் நினைவூட்டுகிறேன்."

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.


Next Story