காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தேர்தல் ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது
காங்கிரஸ் கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முதலாவது பட்டியலை இறுதி செய்யும் பணிகளை கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி டெல்லியில் நேற்று கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சோனியா, கே.சி.வேணுகோபால் போன்ற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அம்பிகா சோனி, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சிங்தியோ, முகமது ஜாவைத் உள்ளிட்ட மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனைகள் நடந்தன. குறிப்பாக டெல்லி, சத்தீஷ்கார், கர்நாடகா, தெலுங்கானா, லட்சத்தீவு, கேரளா, மேகாலயா, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே உத்தரபிரதேசத்தின் அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்காவும் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காந்தி குடும்பத்தினரின் செல்வாக்கு நிறைந்த இந்த தொகுதிகள் மீண்டும் அந்த குடும்பத்தினருக்கே ஒதுக்கப்படும் என யூகங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தேர்தல் ஆணையக் கூட்டம் மார்ச் 11ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.