காங்கிரஸ் பாதயாத்திரை: முன்னாள் மந்திரி விபத்தில் சிக்கி காயம்
காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்து கொள்ள சென்ற முன்னாள் மந்திரி ஆரிப் நசீம் கான் விபத்தில் சிக்கி காயம் அடைந்து உள்ளார்.
நான்டெட்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை யாத்திரை நடந்து வருகிறது. இதில், திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த பாதயாத்திரையானது நாளை மராட்டிய எல்லையை அடைகிறது. மராட்டியத்தின் நான்டெட் மாவட்டத்திற்கான பாதயாத்திரை பொறுப்பு வகிக்கும் காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஆரிப் நசீம் கான், பாதயாத்திரையின் ஒட்டுமொத்த நிர்வாக விவகாரங்களையும் கவனித்து வருகிறார்.
இதற்காக, அவருடன் முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் மராட்டிய காங்கிரஸ் பொறுப்பாளர் எச்.கே. பாட்டீல் ஆகியோரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு காரில் புறப்பட்டு சென்ற கான், நான்டெட் நகரின் பிலோலி சுங்க சாவடி பகுதியில் சென்றபோது, மற்றொரு வாகனம் அவரது காரின் மீது கடுமையாக மோதி விபத்திற்குள்ளானது.
இதில் கான் பயணம் செய்த காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து உள்ளது. விபத்தில் கான் மற்றும் அவரது கார் ஓட்டுனர் இருவரும் காயமடைந்தனர்.
இதன்பின் அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஓடி சென்று உதவினர். முதல் உதவி சிகிச்சையும் அளித்து உள்ளனர். இதன்பின்னர் நான்டெட் நகருக்கு, கான் புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் தொண்டர் சார்பில் விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுனர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து போலீசார், அந்த வாகன ஓட்டுனரை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் வாக்குமூலம் பெற்று கொண்ட பின்பு அவர் விடுவிக்கப்பட்டார்.