கேரளாவில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு: போலீசார் விசாரணை


கேரளாவில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு: போலீசார் விசாரணை
x

கேரளாவில் காங்கிரஸ் கட்சி எம்.பி. கே.சி.வேணுகோபால் அலுவலகத்தல் ஆவணங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் கே.சி.வேணு கோபால். மாநிலங்களவை உறுப்பினரான இவர் ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ஆலப்புழை பழ வீடு பகுதியில் வாடகை வீடு உள்ளது. வேணு கோபால் தற்போது டெல்லியில் உள்ளதால், அந்த வாடகை வீடு எம்.பி. அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இதனை அவரது உதவியாளர்களான ஷேக் அஜ்மல் மற்றும் நூர்தீன் கோயா ஆகியோர் கவனித்து வந்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டு உதவியாளர்கள் வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் காலை மீண்டும் வந்து பார்த்தபோது அலுவலகத்துக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தன.

அலுவலகத்தில் திருட்டு

இதனால் அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த காசோலைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பேனாக்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆலப்புழை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி, அங்கிருந்த முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி.யின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து திருடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story