காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனால்... பா.ஜ.க. அரசில் மந்திரி; வினோத பதவியேற்பு


காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனால்... பா.ஜ.க. அரசில் மந்திரி; வினோத பதவியேற்பு
x

Image Courtesy:  ndtv

மத்திய பிரதேசத்தில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராவத், காங்கிரஸ் அரசின்போது, உள்துறை மந்திரியாக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த ராம்நிவாஸ் ராவத், கடந்த ஏப்ரலில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு இன்று காலை மந்திரியாக 2 முறை பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்படி, ராஜ் பவனில் இன்று காலை 9.03 மணியளவில் முதலில், மத்திய பிரதேச இணை மந்திரி என்ற இளநிலையிலான பதவியை ஏற்று கொண்டார். எனினும், 15 நிமிடங்களுக்கு பின் கேபினட் மந்திரியாக அவர் 2-வது முறையாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். கவர்னர் மங்குபாய் பட்டேல் இந்த 2 பதவி பிரமாண நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தினார்.

ஒருபுறம், அவருடைய 2 முறை பதவியேற்பு என்ற நடைமுறையில் இல்லாத விசயம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்னொருபுறம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டு, பா.ஜ.க. அரசில் மந்திரியாக பதவி வகிக்கும் முதல் நபராகவும் உள்ளார்.

ஏனெனில், காங்கிரசில் இருந்து அவர் இன்னும் விலகவில்லை. தவிரவும், அவர் காங்கிரஸ் மாநில பிரிவின் செயல் தலைவராக உள்ளார். அதனுடன், விஜய்ப்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார்.

எனினும், அவர் பா.ஜ.க. உறுப்பினராக ஆகி, மந்திரியாகவும் ஆகியுள்ளார். இந்த சூழலில், மந்திரியாக பதவியேற்க செய்ததற்காக பா.ஜ.க.வுக்கு நன்றி தெரிவித்து கொண்ட ராவத், காங்கிரசை சாடியும் இருக்கிறார். என்னை குற்றம்சாட்டுவதற்கு காங்கிரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று கூறியுள்ளார். பா.ஜ.க. என்னை மதிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், உடனடியாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சி, ராவத் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என சபாநாயகர் என்.எஸ். தோமரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராவத், காங்கிரஸ் அரசின்போது, உள்துறை மந்திரியாக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர்.

இதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பா.ஜ.க.வில் மந்திரியாக, அதுவும் இதற்கு முன் இல்லாத வகையில் 2 மந்திரி பதவிகளை வகிக்கும் வகையில், ராவத் பதவியேற்று கொண்டது மத்திய பிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.


Next Story