காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை யங் இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடந்துள்ளது என சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரை விசாரித்த நிலையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதன்பின் தனிமைப்படுத்தி கொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர் தற்போது குணமடைந்து வருகிறார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பணமோசடி வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வெளிநாட்டில் உள்ள ராகுல், ஜூன் 5ந்தேதிக்கு பின்னர் ஒரு தேதியை தரும்படி கேட்டுள்ளார்.

இந்த வழக்கில் வருகிற 8ந்தேதி நேரில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

எனினும், லேசான காய்ச்சலே ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இதனால், விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என்றும் சோனியா காந்தி விசாரணையின்போது ஆஜராவார் என்றும் தெரிவித்து உள்ளார்.


Next Story