போராட்டத்திற்கு நடந்து சென்ற காங்கிரஸ் தொண்டரை தன்னுடன் காரில் ஏற்றி அழைத்துச் சென்ற பிரியங்கா காந்தி; வைரல் வீடியோ!
அவரிடம் எங்கு செல்கிறீர்கள் என விசாரித்துவிட்டு, அவரை தனது காரில் ஏறச் சொல்லி தன்னுடன் அழைத்து சென்றார்.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இன்று மீண்டும் ஆஜராகிறார்.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும், அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு, இன்று காலை ராகுல் காந்தியின் ஆதரவாளர் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, அந்த நபரை கண்காணித்ததாக கூறப்படுகிறது.
அவரை தாண்டி கார் சிறிது தூரம் சென்றதும், காரின் பின்னால் அவர் நடந்து வந்து கொண்டிருப்பதையும் பிரியங்கா காந்தி பார்த்துள்ளார். உடனடியாக தனது காரை நிறுத்த சொல்லியுள்ளார். பின்னர் காரில் கதவை திறந்து அந்த நபரை அழைத்தார்.
அவரிடம் எங்கு செல்கிறீர்கள் என விசாரித்துவிட்டு, அவரை தனது காரில் ஏறச் சொல்லி தன்னுடன் அழைத்து சென்றார். இந்த சம்பவத்தை சிலர் தங்களது கேமராவில் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர். இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.