இந்து தர்மத்தை கொச்சைப்படுத்தும் காங்கிரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் - பிரதமர் மோடி
இந்து தர்மத்தை கொச்சைப்படுத்தி, பெண்களை அநாகரீகமாக பேசும் காங்கிரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பெங்களூரு,
நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 26-ந்தேதியும், மே 7-ந்தேதியும் என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 28 தொகுதிகளில், 20 தொகுதிகளுக்கு பா.ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ஜனதா இன்னும் 5 தொகுதிகளுக்கும், கூட்டணி கட்சியான ஜனதாதளம்(எஸ்) 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியது உள்ளது.
அதுபோல், ஆளும் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் 25 தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்து பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "மக்கள் பணத்தை கொள்ளையடித்து தங்களின் பாக்கெட்டை நிரப்புவதே காங்கிரசின் நோக்கம். கர்நாடகத்தை காங்கிரஸ் ஏ.டி.எம். ஆக மாற்றி உள்ளது. இப்படி கொள்ளையடித்தால் ஆட்சியை நடத்த அவர்களுக்கு பணம் எங்கிருந்து வரும்?. கர்நாடக காங்கிரஸ் அரசில் 3 முதல்-மந்திரிகள் உள்ளனர். சூப்பர் முதல்-மந்திரி சித்தராமையா, சாடோ (நிழல்) முதல்-மந்திரி யதீந்திரா, வெய்டிங் (காத்திருப்பவர்) முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளனர்.
மராட்டியம் மாநிலம் மும்பையில் சிவாஜி பூங்காவில் நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியினர் பெண்களை பற்றியும், நாட்டை பற்றியும் கேவலமாக பேசி உள்ளனர். இந்து தர்மத்தை கொச்சைப்படுத்தி, பெண்களை அநாகரீகமாக பேசும் காங்கிரஸ்காரர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். நான் வலிமையாக இருப்பதற்கு நமது நாட்டின் பெண்களே காரணம். கோடான கோடி மக்கள் எனக்கு சக்தியாக உள்ளனர் இந்து தர்மத்திற்காக போராடிய சிவாஜி மகாராஜை அவமானப்படுத்தி உள்ளனர். பெண்கள் வெறும் வாக்களிக்கும் எந்திரங்கள் அல்ல. என்னை வழிநடத்தும் தெய்வங்கள். நான் பெண்களை பெரிதும் மதிக்கிறேன்.
ஊழலில் திளைத்த தலைவர்கள் அனைவரும் இன்று ஒன்றாக சேர்ந்துள்ளனர். அவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள். ஜூன் 4-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் பிடித்து வெற்றி பெறும். வளர்ந்த இந்தியாவுக்காகவும், வளர்ந்த கர்நாடகாவுக்காகவும், ஊழலுக்கு எதிராக போராடுவதற்காகவும் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும்.
ஏழைகளின் நலனுக்காக பா.ஜனதா கடுமையாக உழைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதாவின் செயல்பாடுகள் நாட்டின் வளர்ச்சியில் தெரிகிறது. காலையிலும், மாலையிலும் பொய், தினமும் பொய், இது தான் காங்கிரசின் அஜண்டா. ஒவ்வொரு தேர்தலிலும் பெரிய பொய்களை சொல்வதில் கங்கிரசார் கைதேர்ந்தவர்கள். அதே பொய்யை கர்நாடகத்திலும் காங்கிரஸ் தொடர்கிறது. மத்திய அரசு மீதும், என் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்தாலும் ஆங்கிலேயர்களின் மனநிலையில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர். அவர்கள் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளாகவே இருந்து வருகிறார்கள். முதலில் நாட்டை பிரித்து, சாதிகளுக்கு இடையே சண்டையை அதிகப்படுத்தினர். தற்போது மத விஷயத்திலும் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்ட காங்கிரசை ஒழிக்க வேண்டும். சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் நாட்டையே கொள்ளையடித்தது" என்று அவர் பேசினார்.