இலவச மின்சாரம் உள்பட 5 திட்டங்களுக்கு முதல் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்- சித்தராமையா


இலவச மின்சாரம் உள்பட 5 திட்டங்களுக்கு முதல் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்- சித்தராமையா
x

இலவச மின்சாரம் உள்பட 5 முக்கிய திட்டங்களுக்கு முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சித்தராயைா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும் சித்ராமையா நேராக விதான சவுதாவுக்கு வந்தார். அங்கு அவரது தலைமையில் முதல் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குார் மற்றும் 8 மந்திரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரசின் 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது தலைமையில் முதல் மந்திரிசபை கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இதில் நாங்கள் மக்களுக்கு கொடுத்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம். அதாவது கிருஹ ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், கிருஹலட்சமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி, அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளுக்கு உறுப்பினருக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், யுவ நிதி திட்டத்தின் கீழ் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம்.

இலவச மின்சார திட்டத்திற்கு மாதம் மாதம் ரூ.1,200 கோடி கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கிறோம். இதே போல் இந்த 5 திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும். எவ்வளவு செலவானாலும், நாங்கள் இந்த திட்டங்களை அமல்படுத்தியே தீருவோம். இந்த 5 திட்டங்களுக்கான விதிமுறைகள் அடுத்த முறை நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் வகுக்கப்படும். நிதி பற்றாக்குறை ஏற்படாமல் இந்த திட்டங்களை செயல்படுத்துவோம்.

விதிமுறைகள் உருவாக்கப்பட்டதும், இந்த திட்டங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும். இதில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மேலும் காங்கிரஸ் வழங்கியுள்ள பிற வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கர்நாடக சட்டசபையை வருகிற 22-ந் தேதி முதல் 3 நாட்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். இதற்காக தற்காலிக சபாநாயகராக மூத்த எம்.எல்.ஏ. ஆர்.வி.தேஷ்பாண்டேவை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டத்தொடரிலேயே புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story