நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய சீருடையில் 'தாமரை' படம்: காங்கிரஸ் எதிர்ப்பு


நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய சீருடையில் தாமரை படம்: காங்கிரஸ் எதிர்ப்பு
x

கோப்புப்படம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையில் ‘தாமரை’ படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் மட்டும் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும். 19-ந் தேதியில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது.

புதிய கட்டிடத்துக்கு மாறும்போது, நாடாளுமன்ற ஊழியர்களின் சீருடையும் மாறுகிறது. தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களிடம் புதிய சீருடை எப்படி அமைய வேண்டும் என்று யோசனை கேட்கப்பட்டது. அந்நிறுவனங்கள் அளித்த வடிவமைப்புகளில் இருந்து ஒன்றை நிபுணர் குழு தேர்வு செய்துள்ளது.

தாமரை படம்

நாடாளுமன்ற செயலகத்தில் 5 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பிரிவுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு நிறத்தில் சபாரி சூட்டை சீருடையாக ஊழியர்கள் அணிந்து வந்தனர். புதிய சீருடை, இந்திய தன்மையுடன் அமைந்துள்ளது. ஆண் ஊழியர்களுக்கு 'நேரு ஜாக்கெட்' பாணியில் இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் சீருடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சட்டையில், ஏராளமான 'தாமரை' படங்கள் இடம்பெற்றுள்ளன.

சர்ச்சை

சபை காவலர்களுக்கு இந்த சீருடையுடன் மணிப்பூர் தலைப்பாகையும் உண்டு. இதுபோல், பெண் ஊழியர்களுக்கு சேலை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.

தாமரை என்பது தேசிய மலர் ஆகும். இருப்பினும், அது பா.ஜனதாவின் தேர்தல் சின்னம் என்பதால், சர்ச்சை எழுந்துள்ளது. இரு அவைகளின் உள்ளேயும், வெளியேயும் 271 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு

இதற்கிடையே, தாமரை படம் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றம், அனைத்து கட்சிகளுக்கும் அப்பாற்பட்டது. ஆனால் அதை கட்சி சொத்தாக பா.ஜனதா மாற்றுகிறது.

நாடாளுமன்ற ஊழியர்கள் சீருடையில், தேசிய விலங்கு என்பதற்காக 'புலி' படத்தை ஏன் போடவில்லை? தேசிய பறவை என்பதற்காக 'மயில்' படத்தை ஏன் போடவில்லை? ஏனென்றால் அவையெல்லாம் பா.ஜனதாவின் சின்னம் அல்ல. எவ்வளவு மலிவாக நடந்து கொள்கிறார்கள்?. இந்த வீழ்ச்சியை சபாநாயகர் கவனிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story