ராகுல்காந்தியை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது - காங்கிரஸ்


ராகுல்காந்தியை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது - காங்கிரஸ்
x

ராகுல்காந்தியை பார்த்து மத்திய அரசு பயப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, இந்த வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தியை பார்த்து மத்திய அரசு பயப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியை பார்த்து மத்திய மோடி அரசு ஏன் பயப்படுகிறது? எங்கள் தலைவர் விசாரணைக்கு ஆஜராகம்போது அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி நாங்கள் பேரணியாக மட்டும் செல்ல திட்டமிட்டிருந்தோம்.

உண்மையை அடக்க முடியாது. காங்கிரஸ் உண்மைக்காக போராடுகிறது. இந்த அநீதிக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும். டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலையை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் அமைப்பும், பொம்மையான அமலாக்கத்துறையில் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் நாங்கள் பதில் அளிப்போம். ஏனெனில், கொடுங்கோன்மை மற்றும் உண்மையற்ற மன்றத்தில் உண்மை நிச்சயம் வெல்லும்' என்றார்.


Next Story