2020-ல் கைதான பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு நிபந்தனை ஜாமின் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு


2020-ல் கைதான பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு நிபந்தனை ஜாமின் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x

ஹத்ராஸ் வழக்கில் செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க கேரளாவைச் சேர்ந்த பத்திர்க்கையாளர் சித்திக் கப்பன் 2020 அக்டோபர் 5-ம் தேதி ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்றார். ஆனால், அவரை உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் போலீசார் கைது செய்தனர். கப்பனுடன் சேர்த்து அவருடன் வந்த மேலும் 3 பேரையும் உ.பி. போலீசார் கைது செய்தனர்.

பத்திரிக்கையாளர் கப்பனுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும், ஹத்ராஸ் விவகாரத்தை அவர் பிரச்சனைக்குரிய வகையில் கையாள முயற்சித்ததாகவும் அதனாலேயே கப்பனை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சித்திக் கப்பன் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) போடப்பட்டு, மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இதற்கு எதிராக சித்திக் கப்பன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. சித்திக் கப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

அவரது வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சித்திக் காப்பனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் அடுத்த ஆறு வாரங்களுக்கு டெல்லியில் தங்கி இருக்கவும், அதன் பிறகு கேரளாவிற்கு சென்று உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.


Next Story