தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு: பெங்களூருவில் நாளை 'பந்த்' - கர்நாடகம் முழுவதும் 29-ந் தேதி முழுஅடைப்பு


தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு: பெங்களூருவில் நாளை பந்த் - கர்நாடகம் முழுவதும் 29-ந் தேதி முழுஅடைப்பு
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிற 29-ந் தேதி கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கிடையே காவிரி பிரச்சினை தொடர்பாக நாளை(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மண்டியாவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு நடைபெற்றது. மண்டியா மட்டுமின்றி பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சில கன்னட அமைப்புகள் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதை கண்டித்து தலைநகர் பெங்களூருவில் 26-ந் தேதி(நாளை) முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளன. இதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சர்க்கிளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கன்னட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் காவிரியில் தண்ணீர் திறக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன் பிறகு வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து சில அமைப்புகள் 26-ந் தேதி (நாளை) பெங்களூருவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுததுள்ளன. இதை வேண்டும் என்றோ அல்லது வேண்டாம் என்றோ நாங்கள் சொல்லவில்லை. எங்களை பொறுத்தவரையில் கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற வேண்டும்.

பெலகாவி, மங்களூரு, பீதர், தார்வார் என அனைத்து பகுதியினரும் எங்களுக்கு வேண்டும்.

அதனால் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த முழுஅடைப்பு கண்டிப்பாக நடைபெறும். இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (இன்று) பெங்களூருவில் நடக்கிறது. இதில் கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இதில் 29-ந் தேதி முழு அடைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். காவிரி, மகதாயி, மேகதாது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு இதுவரை 15 முழு அடைப்புகளை நடத்தியுள்ளது. காவிரி எங்களுடையது. இதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரிக்கா நாங்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளோம்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் மாநிலத்தில் அரசு பஸ்கள் ஓடாது. பெங்களூரு உணவகங்களின் உரிமையாளர்கள், தனியார் வாகன சங்கங்கள் சங்கம் உள்பட 150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின்(பிரவீன் ஷெட்டி அணி) தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், 'கன்னட சங்கங்கள் கூட்டமைப்பு வருகிற 29-ந் தேதி மாநிலம் முழுவதும் அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனால் 26-ந் தேதி (நாளை) திட்டமிட்டுள்ள முழு அடைப்பை கைவிட வேண்டும். 2 முழு அடைப்பு போராட்டங்கள் வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம்' என்றார். இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார், திட்டமிட்டபடி பெங்களூருவில் 26-ந் தேதி (நாளை) முழு அடைப்பு நடைபெறும் என்று கூறியுள்ளார். இரு தரப்பினரின் கருத்து மாறுபாட்டால்,

பெங்களூருவில் நாளை திட்டமிட்டபடி முழு அடைப்பு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story