கரும்புக்கான ஆதரவு விலையை ரூ.4,500 ஆக நிர்ணயிக்க கோரி மண்டியாவில் முழுஅடைப்பு


கரும்புக்கான ஆதரவு விலையை ரூ.4,500 ஆக நிர்ணயிக்க கோரி மண்டியாவில் முழுஅடைப்பு
x

கரும்புக்கான ஆதரவு விலையை ரூ.4,500 ஆக நிர்ணயிக்க கோரி மண்டியாவில் விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.

மண்டியா:

கரும்புக்கான ஆதரவு விலை

மண்டியாவில் கரும்பு விவசாயிகள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கரும்புக்கான ஆதரவு விலையை ரூ.4 ஆயிரத்து 500 ஆக நிர்ணயிக்க கோரி விவசாயிகள் அரசிடம் முறையிட்டு வந்தனர். ஆனால் இதுவரையில் அதுபற்றி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 19-ந் தேதி(அதாவது நேற்று) மண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.

அதன்படி நேற்று மண்டியாவில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. இந்த சந்தர்ப்பத்தி ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் போராட்டம் முடியும் வரை மூடப்பட்டு இருந்தன.

விவசாயிகள் மறியல்

ஓட்டல்கள், திரை அரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவையும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் பஸ்கள் ஓடவில்லை. இந்த போராட்டத்திற்கு பொதுமக்களிடம் இருந்து ஆதரவு இருந்தது. போராட்டத்தால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. தங்களது வீடுகளிலேயே முடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மண்டியா டவுனில் உள்ள பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் நூறடி ரோடு, குத்தலு ரோடு, பேட்டை வீதி, ஹொலலு பகுதி, ஹொசஹள்ளி பகுதி, பன்னூரு ரோடு, வி.வி. ரோடு உள்பட மண்டியாவில் முக்கிய சாலைகளில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சகஜ நிலைக்கு...

போராட்டம் காரணமாக மண்டியா டவுன் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் ஓடாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். வெளியூர்களில் இருந்து மண்டியா வழியாக மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் மண்டியா டவுனுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த பஸ்கள் புறநகரில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு சென்றன. இதனால் அந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் பல பஸ்கள் மண்டியா டவுனுக்குள் வராமல் மாற்றுப்பாதையில் சென்றன. மதியம் 2 மணிக்கு மேல் போராட்டம் முடிந்ததும் நகரின் சூழல் சகஜ நிலைக்கு வந்தது.

விவசாயிகள் எச்சரிக்கை

இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. போராட்டத்தையொட்டி மண்டியா டவுன் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story