கோலார் போலீஸ் சூப்பிரண்டு மீது நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகார்


கோலார் போலீஸ் சூப்பிரண்டு மீது நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகார்
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:45 PM GMT)

அரசு நிகழ்ச்சியில் மோதல் தொடர்பாக கோலார் போலீஸ் சூப்பிரண்டு மீது நாடாளுமன்ற சபாநாயகரிடம் பா.ஜனதா எம்.பி. புகார் கொடுத்துள்ளார்.

கோலார் தங்கவயல்

எம்.பி., எம்.எல்.ஏ. மோதல்

கோலார் மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி ஜனதா தரிசனம் என்னும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இந்த ஜனதா தரிசன நிகழ்ச்சியில் பங்காருபேட்டை எம்.எல்.ஏ. நாராயணசாமி, கோலார் பா.ஜனதா எம்.பி. முனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது மந்திரி முன்னிலையில் நாராயணசாமி எம்.எல்.ஏ.வுக்கும், முனிசாமி எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரையொருவர் தாக்க முற்பட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 2 பேரையும் சமாதானம் செய்தனர். கோலார் போலீஸ் சூப்பிரண்டு நாராயணா, முனிசாமி எம்.பி.யை வெளியே அழைத்து சென்றுள்ளார்.

நாடாளுமன்ற சபாநாயகர்

இந்த சம்பவம் தொடர்பாக முனிசாமி எம்.பி. நேற்று கோலாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலாரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். ஆனால் நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூடாது என்பதற்காக நாராயணசாமி எம்.எல்.ஏ. வேண்டுமென்றே என்னிடம் தகராறு செய்தார்.

என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் போலீஸ் சூப்பிரண்டு நாராயணா, நான் ஒரு எம்.பி. என்பதையும் மறந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியே தள்ளினார். இது கண்டனத்திற்குரியது. இது மனித உரிமை மீறல் குற்றம்.

இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் போலீஸ் சூப்பிரண்டு நாராயணா மீது புகார் அளித்துள்ளேன். மேலும் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கும்படி துணை கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னரிடமும் புகார்

இதையடுத்து முனிசாமி எம்.பி. பெங்களூருவுக்கு சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து நடந்த சம்பவங்களை கூறி, போலீஸ் சூப்பிரண்டு நாராயணா மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுத்தார்.


Next Story