பிளே-ஸ்டோர் கொள்கைகளை தவறாக பயன்படுத்திய கூகுள்: ரூ.936.44 கோடி அபராதம்! இந்திய வணிகப் போட்டி ஆணையம் உத்தரவு!
கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோர் கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோர் (ஆப்ஸ்)செயலிக்கான கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய வணிகப் போட்டி ஆணையம், கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது கொள்கை நடத்தைகளை மாற்றியமைக்குமாறும் கூகுள் நிறுவனத்துக்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மொபைல் செயலிகள்(ஆப்ஸ்) அனைத்து பயனாளர்களையும் சென்றடைய கூகுள் பிளே ஸ்டோர் அத்தியாவசிய ஊடகமாக மாறி விட்டது. ஆன்ட்ராய்டு மொபைல் போன்களுக்கான செயலிகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களின் முக்கிய விநியோகஸ்தராக கூகுள் பிளே ஸ்டோர் உள்ளது. இது சந்தைக்கு வரும் செயலிகளை பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
இந்த நிலையில், ஸ்மார்ட் போன்களுக்கான உரிமம் பெற்ற ஓஎஸ், மறைமுகமாக கூகுளின் ஆன்ட்ராய்டு ஓஎஸ்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியாவில் ஸ்மார்ட் போன்களுக்கான உரிமம் பெற்ற ஓஎஸ்-கள் பிறவற்றின் ஓஎஸ்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரக்கணக்கான ஆப்ஸ்கள் உள்ளன. பெரும்பாலான பயன்பாடுகள் பதிவிறக்கம் செய்ய இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் பல ஆப்ஸ் மற்றும் டிஜிட்டல் தரவுகள் ப்ளே ஸ்டோரில் இருந்து பணம் செலுத்தி வாங்கப்படுகின்றன.
கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏதேனும் ஒரு செயலியை நீங்கள் வாங்கி அதில் திருப்தி அடையவில்லை என்றால், கூகுள் ப்ளேயிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்ஸ் டெவலப்பர்கள்(செயலிகளை உருவாக்கும் உற்பத்தியாளர்கள்) பணத்தைத் திரும்பப் பெறுவது எளிதாக இல்லை.
ஆப்ஸ் டெவலப்பர்கள் கூகுளின் கொள்கைக்கு இணங்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் செயலிகளை ப்ளே ஸ்டோரில் பட்டியலிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால், வாடிக்கையாளர்களை அவர்கள் இழக்க நேரிடும். கூகுளின் கொள்கையானது ஒருபக்கமான தன்னிச்சையானதாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏதேனும் ஒரு செயலியை பணத்தை செலுத்தி தரவிறக்கம் செய்துகொள்வார்கள். இந்நிலையில், ஆப்ஸ் டெவலப்பர்கள் அத்தகைய செயலிக்கான பணத்தை, 'கூகுள் ப்ளே பில்லிங் சிஸ்டம்(பணம் செலுத்தும்)' முறையை மட்டுமே பயன்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோர் கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய வணிகப் போட்டி ஆணையம், அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கூகுள் நிறுவனத்திற்கு சி.சி.ஐ. அமைப்பு ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் தனது தளங்களில் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்படுகிறது. அதனால், வருவாய் ஈட்ட கூடிய, ஆன்லைனில் தேடுதல் போன்ற சேவைகளில் ஈடுபடுகிறது. இதனால், ஆன்லைன் வழியேயான பிற விளம்பர சேவைகளின் விற்பனையை நேரடியாக கூகுள் நிறுவனம் பாதிக்கிறது என சி.சி.ஐ. அமைப்பு தெரிவித்து அபராதம் விதித்தது.