ரூ.2 லட்சம் கேட்டு கல்லூரி மாணவர்கள் 2 பேர் காரில் கடத்தல்; 4 பேர் கைது


ரூ.2 லட்சம் கேட்டு கல்லூரி மாணவர்கள் 2 பேர் காரில் கடத்தல்;  4 பேர் கைது
x

உடுப்பி டவுனில் ரூ.2 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர்கள் 2 பேரை காரில் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு;


நர்சிங் கல்லூரி மாணவர்கள்

உடுப்பி டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் பிஜூ (வயது 22) மற்றும் முகமது இனாஸ்(22). இவர்கள் 2 பேரும் மணிப்பால் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் சம்பவத்தன்று உடுப்பி டவுன் அருகே உள்ள சந்திப்பு பகுதியில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி 2 பேரும் "லிப்ட்" கேட்டனர். அப்போது அந்த காரில் இருந்து மர்மநபர்கள் கத்தியுடன் இறங்கினர். அவர்கள் மாணவர்கள் 2 பேரையும் கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்

ஆனால் அந்த பகுதியில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. மேலும், மாணவர்களை, மர்மகும்பல் தொட்டனகுட்டே பூங்காவிற்கு காரில் கடத்தி சென்றனர். அங்கு சென்ற அவர்கள் மாணவர்களின் செல்போன்களை பறித்தனர்.

மேலும், அவர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதற்கிடையே மாணவர் ஒருவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். மேலும், அவர் உடனடியாக இதுகுறித்து டவுன் போலீசில் தகவல் அளித்தார். அந்த தகவலின் பேரில் போலீசார் தொட்டனகுட்டே பூங்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

4 பேர் கைது

அப்போது சந்தேகப்படும்படியாக கார் ஒன்று காபு பகுதி்யில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரில் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் இருப்பது தெரியவந்தது.

மேலும், காரில் இருந்த மாணவரையும் மீட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story