விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவமொக்க டவுனில் நடந்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிவமொக்கா:-
கல்லூரி மாணவி
சிவமொக்கா மாவட்டம் பொம்மனகட்டே பகுதியை சேர்ந்தவர் சுமா(வயது 22). தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரவீனின் பெற்றோர், சுமாவை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.இதற்காக சுமாவின் பெற்றோரிடம் பேசினர். அவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சுமாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. கல்லூரி படிப்பு முடியும் வரை திருமணம் வேண்டாம் என்று அவர் கூறி வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். பிரவீனை திருமணம் செய்து கொள்ளும்படி அவர்கள் வற்புறுத்தி வந்தனர். இதனால் சுமா மிகவும் மனம் நொந்து காணப்பட்டார். இந்நிலையில் தான் உயிருடன் இருந்தால், எப்படியும் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று நினைத்த சுமா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்குமுயற்சித்தார்.
உயிரிழப்பு
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணிப்பால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு சுமா உயிரிழந்தார். இதுகுறித்து சிவமொக்கா டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சுமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுமாவை, வாலிபர் பிரவீன், அவரது தந்தை சந்திராநாயக், தாய் மஞ்சுளா, சகோதரிகள் பிரீத்தி, சந்தியா ஆகியோர் திருமணத்திற்கு வற்புறுத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவமொக்கா டவுன் போலீசார் பிரவீன் உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.