மாணவி மீது கல்லூரி முதல்வர் சரமாரி தாக்குதல்


மாணவி மீது கல்லூரி முதல்வர் சரமாரி தாக்குதல்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காப்பி அடிக்க முயற்சிப்பதாக நினைத்து மாணவி மீது கல்லூரி முதல்வர் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் செய்துள்ளனர்.

சிக்கமகளூரு:

கல்லூரி மாணவி

சிக்கமகளூரு மாவட்டம்(டவுன்) வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியில் சிக்கமகளூரு டவுன் பகுதியில் வசித்து வரும் ஒரு மாணவி படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கல்லூரியில் தேர்வு நடந்தது. அப்போது அந்த மாணவி தேர்வில் காப்பி அடிக்க முயற்சிப்பதாக தேர்வு அறை கண்காணிப்பாளர் கருதினார்.

இதையடுத்து அவர் மாணவியின் செயல் பற்றி கல்லூரி முதல்வர் நளினாவிடம் கூறினார். அதன்பேரில் கல்லூரி முதல்வர் நளினா, தேர்வு முடிந்ததும் அந்த மாணவியை நேரில் அழைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி மயங்கி விழுந்தார்.

போலீசில் புகார்

அதையடுத்து மாணவியின் மயக்கம் தெளிய அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி உள்ளனர். இதையடுத்து மயக்கம் தெளிந்த மாணவியை கல்லூரி நிர்வாகத்தினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு வந்த மாணவி மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.

இதனால் அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் விஷயம் தெரிந்த மாணவியின் பெற்றோர் இதுபற்றி சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story