மும்பை அருகே கோவை ரெயிலில் பயங்கர தீ; லக்கேஜ் பெட்டி எரிந்து நாசம்


மும்பை அருகே கோவை ரெயிலில் பயங்கர தீ; லக்கேஜ் பெட்டி எரிந்து நாசம்
x

அரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை நோக்கி ஏ.சி. சூப்பர் பாஸ்ட் ரெயில் வந்து கொண்டு இருந்தது.

மும்பை,

அரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை நோக்கி ஏ.சி. சூப்பர் பாஸ்ட் ரெயில் வந்து கொண்டு இருந்தது. ரெயில் நேற்று முன்தினம் மதியம் 2.40 மணிக்கு மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த நவிமும்பையில் உள்ள தலோஜா அருகே வந்தபோது, திடீரென ரெயிலின் லக்கேஜ் பெட்டியில் தீப்பிடித்தது. பெட்டியில் இருந்து கரும்பு புகை வெளியேறியது. தகவல் அறிந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். கலம்பொலி தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் லக்கேஜ் பெட்டியில் எரிந்த தீயை அணைத்தனர்.

விபத்தில் லக்கேஜ் பெட்டியில் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கு பயங்கரவாதிகளின் நாசவேலை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்த வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரெயில் பெட்டியில் நடத்திய ஆய்வில் அங்கு வெடிப்பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதன் மூலம் ரெயில் பெட்டியில் தீப்பிடித்தது விபத்து என்பது உறுதியானது. மின்கசிவு காரணமாக லக்கேஜ் பெட்டியில் தீப்பிடித்து இருக்கலாம் என ரெயில்வே போலீசார் கூறினர். மற்ற பெட்டிகளுக்கு தீ பரவும் முன் உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தீப்பிடித்த பெட்டி மட்டும் அகற்றப்பட்டு மற்ற பெட்டிகளுடன் ரெயில் அங்கு இருந்து புறப்பட்டு சென்றது.


Next Story