நிலக்கரி ஊழல் வழக்கு: நிலக்கரி துறை முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
இந்த வழக்கில் தண்டனை பெற்ற அவர் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
மும்பை,
மாராட்டிய மாநிலத்தில் கிழக்கு லோஹாரா நிலக்கரி தொகுதியை முறைகேடாக ஒதுக்கீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சிபிஐயின் கூற்றுப்படி, 2005 மற்றும் 2011 க்கு இடையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், கிரிமினல் சதித்திட்டம் தீட்டி அரசை ஏமாற்றியுள்ளனர்.
கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஜிஐஎல்) நிறுவனத்தின் இயக்குனர் அந்நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.120 கோடி என்றும் கூறியுள்ளார். ஆனால் அதன் சொந்த நிகர மதிப்பு ரூ.3.3 கோடி மட்டுமே என்று சிபிஐ விசாரணையில் கூறியுள்ளது.
இதனையடுத்து, ஆகஸ்ட் 25, 2014 அன்று சுப்ரீம் கோர்ட், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்தது.
இந்த நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட, நிலக்கரி துறையில் செயலாளர் ஆக இருந்த எச் சி குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அபராதமாக ரூ.1 லட்சம் விதிக்கப்பட்டது.
அவருடன் சேர்த்து முன்னாள் இணை- செயலாளர் கே எஸ் குரோபாவுக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அபராதமாக ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஜிஐஎல்) நிறுவனத்தின் இயக்குனர் முகேஷ் குப்தாவுக்கு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அபராதமாக ரூ.2 லட்சம் விதிக்கப்பட்டது. அந்த நிறுவனம் தனியாக அபராதமாக ரூ.2 லட்சம் செலுத்தவும் டெல்லி கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் எச் சி குப்தா மற்ற மூன்று நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார், மேலும் அந்த தண்டனைகளுக்கு எதிரான அவரது மேல்முறையீடு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற மற்ற நபர்களுடன் சேர்ந்து தற்போது அவரும் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.