நிலக்கரி இறக்குமதிக்கு முதல் முறையாக டெண்டர் வெளியிட்ட கோல் இந்தியா நிறுவனம்
பொதுத்துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’ முதல் முறையாக 24 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய டெண்டர் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிலக்கரி உற்பத்தி நிறுவனமான 'கோல் இந்தியா லிமிடெட்' நிறுவனம், 2021-22-ல் 62.26 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்திருந்தது. நாடு முழுவதும் மின்சார உற்பத்தி மற்றும் இதர பயன்பாடுகளுக்கான நிலக்கரி தேவை அதிகரித்துள்ளதால், பற்றாக்குறையை சமாளிக்க நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரை 24 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய கோல் இந்தியா நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் வரலாற்றில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது இது தான் முதல் முறை ஆகும்.
இதில் மாநில அரசுகளுக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களுக்கு 12 லட்சம் டன் நிலக்கரியும், தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு 12 லட்சம் டன் நிலக்கரியும் அளிக்கப்பட உள்ளது. அதே சமயம் தமிழகத்திற்கு 1.3 லட்சம் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.