இந்திய மருத்துவ கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மருத்துவர்கள் இடையே அடிதடி, மோதல்; பரபரப்பு வீடியோ
மத்திய பிரதேசத்தில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மருத்துவர்கள் ஒருவருடன் ஒருவர் மோதி கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
ஜபல்பூர்,
இந்திய மருத்துவ கூட்டமைப்பின் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதேபோன்றதொரு கூட்டம் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் நேற்று நடந்தது.
அதில், இந்திய மருத்துவ கூட்டமைப்பின் ஜபல்பூர் பகுதிக்கான முன்னாள் தலைவர், டாக்டர் அமரேந்திர பாண்டே வரவேற்புரை ஆற்றினார். இதற்கு அந்த அமைப்பின் குவாலியர் பிரிவு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடக்கத்தில் மேடையின் கீழே வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் மேடைக்கு சென்று அமரேந்திராவை தாக்க தொடங்கினர். அவரும் பதில் தாக்குதல் நடத்தினார். இதனை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் ஜபல்பூர் நகருக்கான புதிய தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் அபிஜித் பிஷ்னோய் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதேபோன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பின் மாநில தலைவர், டாக்டர் ஆர்.கே. பதக் கூறும்போது, ஆண்டு செயல் குழு கூட்டம் நேற்று நடந்தது. எங்களது ஒட்டுமொத்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டோம்.
டாக்டர் அமரேந்திர பாண்டே வரவேற்புரை ஆற்றியபோது, சில பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேடைக்கு சென்றனர். அதன்பின்னர், கைகலப்பில் ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் நடத்தினர் என கூறியுள்ளார். கூட்டத்தில் மருத்துவர்கள் ஒருவருடன் ஒருவர் மோதி கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
பதக் தொடர்ந்து கூறும்போது, இது மிக வருத்தத்திற்குரிய சம்பவம். வருங்காலத்தில் இதுபோன்று நடைபெற கூடாது. விவகாரத்திற்கு பின்னர், அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து, தவறு நடந்து இருக்குமென்றால் அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என கூறினோம்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இதுபற்றி விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்படும். அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.