மதுபான ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சம்மன்: பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் - மணிஷ் சிசோடியா


மதுபான ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சம்மன்: பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் - மணிஷ் சிசோடியா
x

மதுபான ஊழல் வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மதுபான ஊழல்

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா பெயரும் அடிபட்டு வருகிறது. அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கெஜ்ரிவால் சாடினார்.

மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன்

இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் நாயக், அபிசேக் போயின்பள்ளி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களைப் பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

கால அவகாசம் வேண்டும்

இந்த நிலையில், டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபான ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கூறியதாவது:-

சிபிஐ-ன் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு வாரத்துக்கு பிறகு நான் தயாராக இருப்பேன். டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் சிபிஐ-க்கு கடிதத்தின் மூலம் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளேன். நான் பிப்ரவரி இறுதி வாரத்தில் ஆஜராவேன் எனவும் தெரிவித்துள்ளேன்.

டெல்லி அரசின் நிதியமைச்சராக சரியான நேரத்தில் பட்ஜெட்டினைத் தாக்கல் செய்யும் கடமை எனக்கு உள்ளது. நான் அதற்காக 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்து வருகிறேன். நான் எப்போதும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். இப்போதும் சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக உள்ளேன். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் இருப்பதால் எனக்கு கால அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story