அயோத்தி விமான நிலைய பாதுகாப்பு பணியில் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள்: மத்திய அரசு அனுமதி

சி.ஐ.எஸ்.எப். வீரர்கள், பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்வதுடன், விமான நிலைய பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுவார்கள்.
அயோத்தி,
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் எழுப்பப்பட்டு உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி அயோத்தியில் பிரதமர் மோடியால், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இதற்காக 821 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. விமான நிலையம் பல்வேறு கட்டங்களாக மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, முதல் கட்ட அடிப்படையில், 65 ஆயிரம் சதுர அடியில் விமான நிலையம் பரந்து விரிந்துள்ளது. 2,200 மீட்டர் அளவிலான ஓடுபாதை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், போயிங் 737 ரக விமானம், ஏர்பஸ் 319 மற்றும் 320 ஆகிய விமானங்கள் தரையிறங்க முடியும். தொடர்ந்து, 2-வது கட்டத்தில் ஓடுபாதையானது 2,200 மீட்டரில் இருந்து 3,700 மீட்டராக அதிகரிக்கப்படும்.
ஏறக்குறைய 4 கி.மீ. நீளத்தில் அமையும் ஓடுபாதையால், சர்வதேச விமானங்களான போயிங் 787 மற்றும் போயிங் 777 ஆகியவை அயோத்தியில் தரையிறங்க முடியும்.
ராமர் கோவில் விழாவை முன்னிட்டு எண்ணற்ற பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் வர கூடும். அதனால், விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இதனை தொடர்ந்து, அயோத்தி விமான நிலையத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்குவதற்கான அனுமதியை, துணை தளபதி அந்தஸ்திலான அதிகாரி ஒருவரின் கீழ் 150-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) அடங்கிய ஆயுதமேந்திய குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்து உள்ளது.
இதன்படி, அவர்கள் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்வதுடன், விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
விமான நிலையத்திற்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் போன்ற தொழில்முறை பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு அமைப்புகள் மறுஆய்வு செய்து பரிந்துரை செய்திருந்தன.
கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐ.சி.-814 ரக விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து, உள்நாட்டு விமான நிலையங்களை பாதுகாக்கும் பணியில் சி.ஐ.எஸ்.எப். ஈடுபட்டு வருகிறது.