சீன விசா பணமோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
கார்த்தி சிதம்பரம் அடுத்த மாதம் 5-ம் தேதி கோட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரான ப. சிதம்பரம் கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்திமையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால் அந்த பணிகள் முடியாமல் காலதாமதமானதால் சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களின் விசா முடிவடைந்தது.
இதனால் 263 ஊழியர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தருமாறு அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரராமன் என்பவருக்கும் ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுத்தாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ப.சிதம்பரம் வீட்டில் கடந்தாண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கரராமனை கைது செய்தனர். சிபிஐ புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு பதிவு செய்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் தவிர, அவரது உதவியாளர் எஸ்.பாஸ்கரராமன், பதம் துகர், விகாஸ் மகாரியா, மன்சூர் சித்திக் ஆகிய மேலும் 4 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், தான் கைது செய்யப்படாமல் இருக்க, கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அது கடந்த 2022 ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அது இப்போது வரை நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இந்த விசா பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்தை குற்றவாளி என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி ரோஸ் அவின்யூ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம், அவரது உதவியாளர் எஸ்.பாஸ்கரராமன் மற்றும் ஒரு சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் அடுத்த மாதம் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.