இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்களின் முயற்சி முறியடிப்பு - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
இமாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன.
புதுடெல்லி,
அருணாச்சலபிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊருவ முயன்றன. அப்போது, இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன. இந்த மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயமடைந்தனர். இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயமடைந்தனர். சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் குறித்த தகவலை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது.
இதனிடையே, சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் இந்திய எல்லையில் சீன படைகள் ஊடுருவ முயற்சித்தது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ராஜ்நாத் சிங் பேசியதாவது,
கடந்த 9-ம் தேதி தவாங் செக்டார் யங்ட்சி பகுதியில் ஆக்கிரமித்து தற்போதைய எல்லையை மாற்றியமைக்க சீன படையினார் முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சி நமது படையினரால் உறுதியான முறையில் முறியடிக்கப்பட்டது. நமது எல்லையை ஆக்கிரமிக்க முயன்ற சீன படையினரை நமது படையினர் வீரமாக தடுத்து அவர்களின் நிலைக்கு திருப்பி அனுப்பினர்.
இந்த விவகாரம் சீனாவுடன் ராஜாங்க ரீதியிலும் கொண்டு செல்லப்பட்டது. எல்லைகளை பாதுகாக்கவும், எல்லையில் மாற்றங்களை மேற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்கவும் நமது படைகள் உறுதியாக உள்ளது என்பதை இந்த அவையில் நான் உறுதியளிக்கிறேன்.
இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, பலத்த காயங்களும் ஏற்படவில்லை என்பதை இந்த அவைக்கு கூறிக்கொள்கிறேன்.
இந்திய ராணுவ கமாண்டோக்களின் சரியான நேர தலையீட்டால் சீன படைகள் அவர்களின் இடத்திற்கு திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, நடைமுறையில் உள்ள விதிகளின்படி 11-ம் தேதி அந்த பகுதி இந்திய கமாண்டோ - சீன கமாண்டோ இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், எல்லையில் அமைதியை நிலைநாட்ட விரும்புவதாகவும், அத்துமீறி நுழைதல், தாக்குதல் போன்ற எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று சீனா மறுப்பு தெரிவித்துள்ளது' என்றார்.