சிக்கமகளூரு நகரசபை தலைவரை மாற்ற வேண்டி தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் பா.ஜனதா உறுப்பினர்கள் சபதம்
சிக்கமகளூரு நகரசபை தலைவரை மாற்ற வேண்டி பா.ஜனதா உறுப்பினர்கள் 14 பேர் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோவிலில் சபதம் எடுத்து கொண்டனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு நகரசபை தலைவரை மாற்ற வேண்டி பா.ஜனதா உறுப்பினர்கள் 14 பேர் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோவிலில் சபதம் எடுத்து கொண்டனர்.
நகரசபை தலைவர் பதவி
சிக்கமகளூரு நகரசபைக்குட்பட்ட பகுதியில் 35 வார்டுகள் உள்ளது. இந்த 35 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிந்தது. இந்த தேர்தலில் 18 வார்டுகளில் பா.ஜனதா கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 12 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். ஜனதா தளம் (எஸ்) 2 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
இதையொட்டி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சி நகர சபையை கைப்பற்றியது. இந்த நகரசபையின் தலைவராக வேணுகோபால் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் பொறுப்பு வகித்து ஒரு ஆண்டு 7 மாதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு ஆண்டு 3 மாதங்கள் பொறுப்பு வகிக்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 2½ ஆண்டுகள் வேணுகோபால் நகரசபை தலைவராக பொறுப்பு வகிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
14 உறுப்பினர்கள் எதிர்ப்பு
இந்தநிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலருக்கு வேணுகோபாலின் செயல்பாடு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நகரசபை உறுப்பினர் ராஜூ அல்லது மதுகுமாரில் ஒருவரை தலைவராக நியமிக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் மாவட்ட பொறுப்பாளர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் பா.ஜனதாவை சேர்ந்த 14 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா கோவிலுக்கு ெசன்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் சபதம் எடுத்தனர்.அதாவது மதுகுமார், ராஜூ ஆகிய இருவரில் ஒருவரை நகரசபை தலைவராக தேர்வு செய்ய ஆதரவு அளிப்போம் என்று சபதம் எடுத்து கொண்டனர். இது குறித்து பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியிடம் இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) எடுத்து கூற இருப்பதாக கூறியுள்ளனர்.
பதவியில் இருந்து விலக தயார்
இந்தநிலையில் இது குறித்து நகரசபை தலைவர் வேணுகோபால் கூறுகையில்,
எனக்கு இன்னும் 13 மாதங்கள் நகரசபை தலைவராக பொறுப்பு வகிக்க அவகாசம் உள்ளது. அதற்குள் என்னை மாற்றும்படி சிலர் கூறி வருகின்றனர். ஒரு வேளை கட்சி தரப்பில் என்னை விலகி கொள்ளும்படி கூறினால், நான் விலகி கொள்வேன்.
தொடர்ந்து நீடிக்கும்படி கூறினால், நகரசபை தலைவர் பதவியில் நீடிப்பேன் என்றார். இதனால் சிக்கமகளூரு நகரசபையில் அடுத்த என்ன நடக்க போகிறது என்பது தெரியவில்லை.