பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடி ஏற்றுகிறார்


பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடி ஏற்றுகிறார்
x

சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நடக்கும் விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா இன்று (செவ்வாய்க்கிழமை) தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணிக்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:-

சுதந்திர தின விழா

பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா பெங்களூரு கப்பன் ரோட்டில் உள்ள மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றுகிறார். அதன் பிறகு அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

பின்னர் மேடைக்கு வரும் சித்தராமையா, சுதந்திர தின உரையாற்றுகிறார். அதன் பிறகு போலீஸ் உள்பட 38 பிரிவுகளின் அணிவகுப்பு நடக்கிறது. இந்த அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி சித்தராமையா ஏற்றுக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

துண்டு பிரசுரங்கள்

மானேக்ஷா மைதானத்தில் பொதுமக்கள் நிகழ்ச்சியை காண 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

குடிநீர் பாட்டில்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், துண்டு பிரசுரங்கள், ஆயுதங்கள், கருப்பு துணிகளை மைதானத்திற்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள், டாக்டர்கள் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கையாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்.

10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

இந்த விழாவையொட்டி மானேக்ஷா மைதானத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் கமிஷனர் தயானந்த், மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சதீஸ்குமார், 9 துணை போலீஸ் கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 43 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 180 சப்-இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படையினர் உள்பட 1,800 போலீசார் மானேக்ஷா மைதானம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுதவிர பெங்களூரு நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில், பஸ் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு நகர் முழுவதும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்

மேலும் மானேக்ஷா மைதானத்தை சுற்றி போக்குவரத்து மாற்றமும், முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணியில் இருந்து காலை 11 மணிவரை வரை கப்பன் ரோடு, பி.ஆர்.வி.ஜங்ஷன், காமராஜ் ரோடு ஜங்ஷன் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருப்பவர்கள் மைதானத்தின் 3-வது நுழைவு வாயில் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story